தத்துவ ஞான மார்க்கம்

🙏 திருவருட்கழன் மாலை

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

கலிவெண்பா

1. திருவார் செழுங்கமலச் சீராரும் பொற்றா

ளருமா முனிவ ரமரர் - பெருமால்கொண்


2. டின்னஞ் சுவடொற்றிக் காணாதங் கேதமுற

முன்னை யொருமூவர் தாமுயலப் - பின்னவியற்


3. பாதகமே செய்துழலும் பாவியே னைப்பொருளா

நாதனுடல் சாத்தி நலந்திகழப் - பேதையேன்


4. றன்னைவலிந் தாண்டருளித் தாவாத வென்பவத்தை

முன்னமுறு மூலமல மாமாயை - தன்னினொடுஞ்


5. சேரத் துணித்துச் சிறியேனைத் தானாக்கச்

சீருற்ற கோவத்தைச் சீர்ப்பதியில் - வீரைப்


6. பெருமான் சிவப்பிரகா சப்பெருமான் பேரா

வருண்மா மகடுறவி யாயுந் - திருமா


7. மகள்வீறு சாந்தியொடு வாழ்கருணை யன்பாந்

துகடீர் தயைமாதர் சூழ- மிகுஞானச்


8. சித்தர்கணஞ் சேவிப்பச் சீராரு நல்லன்பர்

பத்தியுட னின்று பரவியிட - வெத்திசையு


9. மாரணங்க ளாகமங்க ளாத்தர்மொழி யென்கின்ற

பாரணங்களெங்கும் பரந்தொலிப்பக்-காரணந்தான்


10. யோகாந்த ஞான வுயர்முத்தி மண்டபத்தி

லேகாந்த பீடத் தினிதிருந்து - சோகாந்த


11. வெங் கோலகால மிகப்பெருத்த வெவ்வினையாம்

பொங்கார் மயனெறியிற் போய்நரகி - லங்கே


12. தலைகீழா வீழ்வேனைத் தன்னருளா கின்ற

வலியாலே தானெடுத்து வன்பாய் - நிலையதுற


13.நெஞ்சத் தினைவணக்கி நீள்வஞ்சப் பற்றெல்லாந்

துஞ்சத் துகளாகப் பார்த்தருளி - நஞ்சதுறு


14. மென்கோண் முழுது மெழிற்கணாற் றான்விழுங்கி

நன்கேது மில்லாதே னாய்த்தலையி - லன்போடும்


15.வைத்தவடி வாசாம கோசரமென் றாரணங்கள்

பித்துறுபேரன்பாய்ப் பிதற்றுமடி - யெத்தவருந்


16.தேடுமடி தேட்டமெலாந் தீர்க்குமடி திண்ணன்பிற்

கூடுமடி கூடற் கரியவடி - பாடியிடும்


17.பத்தர்க்கு நல்லவடி பாதகனே னைப்பிடித்து

முத்திப்போ கத்தின் முழுத்துமடி - சித்தத்தை


18.யாற வளித்தவடி யாசை யறுக்குமடி

யூறு முளத்தை யொருக்குமடி - வேறதற


19.தன்னை யளிக்குமடி சால வினியவடி

யென்னை யுருக்கியின் பித்தவடி - முன்னையொரு


20.மூவர்க்கு மூலவடி மூவாது சாவாது

தேவிற் பொலிந்து திகழ்ந்தவடி - தாவற்ற


21.சுத்தசுக போதவடி சொல்லிற் படாதவடி

பெத்தமொடு முத்தியிற்பே ரின்பவடி-யெத்தியெனை


22.யாரவென வந்தவடி யாயேனை யாண்டருளும்

பேரருளாற் றான்பெரும்பித் தானவடி - சீரருளா


23.லெல்லை யிறந்தவடி யென்றுமுள தாயவடி

சொல்லுமனஞ் செல்லரிய தூயவடி-தொல்லைவினை


24.போகத் துரந்தவடி பூரணம தாயவடி

மாகத் தவருண் மறைந்தவடி - யோகத்தின்


25.மெய்த்துமுடி வாயவடி மெய்யன்பி லார்க்கென்றும்

பொய்த்தவடி பூமராய் நின்றவடி - நித்தலுமென்


26.பேராத பேரவலங் கண்டும் பிசகலறச்

சீரார் திருக்கருணை செய்யுமடி - யோராதே


27.யென்றுமப ராதமே செய்திடினுந் தான்முனிவை

யொன்று மறியாத வொப்பிலடி - கன்றுமனப்


28.புல்லினத்தேநான்மறந்தும் போகாமைத் தன்னன்பர்

நல்லினத்தை யேகூட நல்குமடி - யல்லலுறுஞ்


29.சாதி குலச்சடலைச் சங்கற்ப நான்சாடப்

போத மளித்த புனிதவடி - மேதக்க


30.வெட்டாமி யோகங் களும்பயனுங் கோதெனநான்

விட்டே விளையாட வைத்தவடி - துட்டாய


31.வென்கொடுமைநெஞ்சத் திருந்தகலா தேயருள்செய்

நன்கதனான் மிக்கு நயந்தவடி - தன்கருணை


32.காட்டவெனை யாண்டவடி காயமதாய் மாளுமெனை

மீட்டவடி யுள்ளே விழித்தவடி-பாட்டினொடு


33.பண்ணாகி நின்றவடி பாவனைதீர்த் தாருள்ளக்

கண்ணாய் மணியாய்க் கலந்தவடி - யெண்ணுதற்கு


34.நான்மறைகள் கூசுமடி நன்கறியே னேத்தியிடு

மூனவுரை கேட்க வுவந்தவடி - மோனமதாற்


35.றன்முடிவு கூறுமடி தன்பெருமை பாராதே

யென்னை யிங்ஙனாள விசைந்தவடி - பன்னுமறை


36.மூலமென வோதுமடி மூடனே னென்புருக்குஞ்

சீலமதாய் நின்று திகழ்ந்தவடி - காலமவை


37.கண்டவடி காலங் கடந்தவடி யென்னுயிரை

யுண்டவடி யுள்ளொளியாய் நின்றவடி-மண்டுபவக்


38.காடு சிதைத்தவடி கண்ணாகு மானந்த

நாடுதனை யெனக்கு நல்குமடி - கேடனே


39.னன்பதறுந் தீங்கொழிய வள்ளூறு முள்ளந்தந்

தின்பமுறவென்னையிங்ஙன்வைத்தவடி-முன்பின்றே


40.வேதித் திலகுமடி மெய்யரனு பூதியினாற்

சாதித்துக் காட்டியிடுஞ் சம்புவடி - பேதிக்கு


41.மெப்பொருளு மாயவடி யாவுங் கழன்றவடி

முப்பதமு மோதி முடிந்தவடி - சிற்பதமாய்


42.நின்றபடி நின்றவடி நேரேயென் கண்குளிர

வொன்றுமடி யோருவமை யற்றவடி-சென்றடையு


43.மெப்பதமு மாயவடி யேழையர்க்கு நல்லவடி

யொப்புவமை தான்றனக்கா யுள்ளவடி-யெப்பழைய


44.கோளும் விரகெவையுங் கொண்டவடி கூழையனை

யாளு முவந்தடிமை கொண்டவடி - நாளுமுறு


45.நண்புசெறு மென்றனையு நாணிவிடா தேபிடித்துப்

புண்செயுமென் புன்மையெலாம் போக்குமடி-கண்டுகளி


46.கூர வினியவடி கூற வரியவடி

பார்வையற மெய்யே பணைத்தவடி யூரொடுபே


47.ரின்றி யிலகுமடி யேகாந்த மாயவடி

நன்றினொடு தீங்கதிலா ஞானவடி - வென்றிமிகுந்


48.தூய துறவினர்பாற் றுன்னுமடி தூவிஷய

மாயமுறி லங்கே மறையுமடி - காயமது


49.பேணியிடும் பெற்றியரைப் பேயாக்க வல்லவடி

காணுமலைமுற்றுங்கண் ணாக்குமடி - நாணமெலாந்


50.தீர்த்தவடிசெத்தினிப்போய் நான்பிறவாவண்ணமெனைப்

பார்த்தவடி பாதாதி கேசமுறச் - சீர்த்த


51.வருளே பொழியுமடி யாய்வொன்று மில்லா

மருளேனை மாயாமைக் காத்துத் - தெருளாவென்


52.சித்தஞ் சிவமாக்கிச் செய்தவெலா மெய்த்தவமா

வைத்தெனைவாழ்வித்துவந்த வள்ளலடி-யெத்திறமு


53.நானாக நல்குமடி ஞாலமெலா மானவடி

வானாடர் காண வருந்துமடி -யூனோ


54.டுயிருடைமையானவெலாங் கொண்டவடியோரேன்

மயலறவென் சென்னிதனின் மன்னி - நயமதுறச்


55.சென்ற நனவைத் திரித்துத் திரிந்தவிடத்

தொன்றும் விகார மொழித்த வடி - கன்றுமிருள்


56.காண வளித்தவடி காண்கின்ற வக்கரியாய்ப்

பேணுமிரு டன்னைப் பிரித்தவடி - மாணுணர்வு


57.தானாகி நின்றவடி தன்னிற் பகுதியினை

யானா தழித்தழியா தானவடி - தானா


58.டறிவெங்கு மாயுள்ளா யெல்லா மறிந்து

பிறிவின்றி நின்று பிறங்கிச் - செறிகின்ற


59.தோற்றந் திதியழிவுந் தன்கணே தோன்றியிட்

வூற்றத்துக் கோவா தொளிருமடி-யேற்றத்திற்


60.றானிகழ்ந்த கோளெவையுஞ் சாற்றிப் பரன்மிகுதி

யானெனவே யாவளித்துநின்றவடி-மேனிகழ்ந்த


61.கோளெவையுங்குற்றமெனக் காட்டியக்கோண்மழுக்கி

நீளும் பரன்கனவாய் நின்றவடி - மாளவெறு


62.முய்த்தவவி காரமதா யோங்குமடி யோதரிதாய்ச்

சுத்தவெதி ரித்தமறத் துன்றுமடி - யத்தி


63.லறிவயர்வங் கின்மையினா லாய்ந்தற்ற வத்தங்

குறியிலிது விங்கெனலாய்க் கூடி - நெறிமையினிற்


64.போந்துணர்வாய் ஞாலத்து வேராய்ப் புகுந்துணுர்வு

தேய்ந்து செருகியிடுஞ் சீரழிவால் - வாய்ந்தபரன்


65.றன் சுழுத்தி யாகுமெனச் சுட்டியது தான்கழன்று

நன்பரமே யாகி நயந்தவடி - முன்புகலு


66.மீரியல்பாய் நின்ற விகுதி பகுதியும்போ

யோரியல்பாய் நின்றங் கொளிருமடி - தீர


67.வுதயாத் தமனமுமற் றோதவத்தை யும்போ

யிதயாத்த மாகி யிலங்கு - மதுபார்த்துத்


68.தீர்ந்து கழன்று தெளிவாய் நிரந்தரமா

யார்ந்த வுணர்வுருவ மானவடி போந்தவித


69.னிற்றிகழும் விச்சுவமே செய்ததுபா ரென்றருள

வித்தனையு நானென் றியம்பியிடு - மித்திகழ்வால்


70.நின்றபடி நேரே யிதம்வே றெனத்தோன்று

மென்றியல் குற்ற மெனக்கேற்கக் - கன்றலறக்


71.காட்டுமடி யிவ்வளவுங் காணு முபாதிகளை

வாட்டிய திங்கினித்தான் மன்னி நிகழ் - சேட்டுணர்வின்


72.மேற்கிடந்த மாசறுத்த லென்றுவெதிரித்தமுந்

தீர்த்திதமுந் தானாய்த் திகழ்ந்தவடி - பார்த்த


73.வனிதமுடன் றானிதமு மற்றொளிரு மம்பொற்

புனிதவடி பூதவுல குண்ட - தனதுசெய


74.றானு மிறந்தவடி சாற்றவறி தாயவடி

யான வுபசமன மாயவடி - மோனபதந்


75.தம்பிரான் வந்து வெளிப்படுமித் தானமென

நம்புமா காட்டி நயந்தவடி யெம்பரம


76.தின்றி யெழிறிகழு மெல்லையிலாப் பேரொளியாய்

நின்றபடி நின்ற நிமலவடி - யென்றுந்தா


77.னோத வுலகி னுலப்பில்சுக சாகரமாய்

நீதியது தானாய் நிகழ்ந்தவடி - யீதெனவே


78.தானிருந்து காட்டத் தயங்குமூ மைக்குடத்தி

னீர்நிறைந்தாற் போனிறைந்து நின்றவடி - தேனிறந்தே


79.யெற்புத் தொளைதொறுமங் கேறிமயிற் கால்கடொறு

மிக்குத்தித் திக்கும் விமலவடி - தக்க


80.வொருமையா லித்திகழ்வெ லாமொன்று சித்திப்

பெருமைபே ரைம் புலனு மாரக் - கரவதிலா


81.வெள்ளவெளி யாயவடி மேவுமருட் கண்ணதனாற்

கள்ளமற வெவ்வுருவுங் காணுமடி - தொள்ளைச்


82.செவிவழிய தின்றித் திகழொலியாய் நின்ற

நவையிலடி நாடற் கரிதாய்ச் சுவையதுறு


83.நாவினாலன்றி நலமாரத் தித்திக்கு

மோவிலா வின்சுவையா மொப்பிலடி - மேவு


84.முடற்பரிச மின்றி யொழிவறுபே ரின்பத்

திடப்பரிச மாகித் தெரிவுற் - றுடைக்குமிழான்


85.மேவு மணமின்றி விரிவொடுக்க மின்றாகித்

தாவின் மணமாய்த் தயங்குமடி பாவியேன்


86.சென்னிகுடி கொண்ட வடி தீவினையே னெஞ்சதனின்

மன்னி யிருந்தவடி நான்மறந்துந் - தன்னொழிய


87.வுன்ன றவிர்த்தவடி யொன்றாகி நின் றவடி

யன்னையினும் தானெனக்கன் பானவடி - நன்னயமா


88.மன்பர்க் கெளியவடி யன்பதிலா நெஞ்சதுறும்

வன்பர்க்குச் சால வலியவடி - யென்பற்றாம்


89.வஞ்சத்தைச் சாடுமடி வாராது வந்தவடி

கொஞ்சிட் டுபநிடங்கள் கூவுமடி -தஞ்சமதாய்


90.நின்றபடி நின்றவடி நேரேயென் மோகத்தைக்

கொன்றவடி யுண்டிலையென் கோண்முழுது மன்றிய வெண்


91.மாற்றமது வாட்டுமடி வாழ்வறவாழ் வித்தவடி

போற்றுமடி யாரைமிகப் போற்றுமடி - யாற்றா


92.தருணினைந்தங் கள்ளூறு மன்பர்தஞ் சிந்தை

வெருளதற மெய்யே பொலிந்திங் - கிருளுமனத்


93.தென்னைப் பொருளாக வென்போ லுடல்சாத்தித்

தன்னைத் தருந்தம்பி ரான்றனடி - சென்னிக்கண்


94.வைத்து மனமகிழ்ந்து வாயார நான்வாழ்த்தும்

பித்ததுவாம் பேரன்பே தந்தருளெ - னத்தா


95.சிவப்பிரகா சாபோற்றி சீமானே போற்றி

யவக்கடலு ளாழ்வேனை யாண்ட -தவக்கடலே


96.போற்றி சயசய பல்லாண்டு பல்லாண்டு

போற்றி சயசய போற்றீ

நேரிசை வெண்பா

என்புன் றலைமன்னு மின்பத் திருக்கழலை

யன்பொன்றி யேத்த வனவரத - மின்பஞ்செய்

தாண்டானே தந்தருள் செய்யல்லது வேறொன்றையு நான்

வேண்டா மையுமருள்வாய் மெய்.