தத்துவ ஞான மார்க்கம்
"சாதல் பிறத்தல் என்னும் இரு வினையில் இருந்து விடுதலை"
குரு துரிய மகான் தத்துவராயர்
📜 மகான் தத்துவராயர் வரலாறு
குருதுரிய நிலையடைந்த மகான் தத்துவராயர் கி.பி 15-16ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல்,மறைத்தல் மற்றும் அருளல் என்னும் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் பெற்றவரும் ஆவார். இவருக்கு இந்த நிலையை அருளியவர் ஆதியும் அந்தமும் இல்லா வேதியன் சுரூபானந்த சோதி ஆவார்.
இரண்டு வகையான வரலாறுகள் மகான் தத்துவராயர் பற்றி உள்ளது.
முதல் வரலாறு:
1841ஆம் ஆண்டு கொன்றைமா நகரம் அருணாச்சல முதலியார் பதிப்பித்த புத்தகத்தில் வெளிவந்தது.இதில் தத்துவராயரின் மாமா சொரூபானந்தர் என்றும் சொரூபானந்தரின் குரு சிவப்பிரகாசர் என்றும் இருக்கும்.
தனக்கு ஞான ஆசிரியரை தேடி தத்துவராயர் வடக்கு நோக்கி சென்றார் என்றும் சொரூபானந்தர் தெற்கு நோக்கி பயணித்து சிவபிரகாசரை தனக்கு குருவாக ஏற்றுக் கொண்டார் என்றும், வடக்கே சென்று தமக்கு குரு கிடைக்காமல் திரும்பி வந்த தத்துவராயர் தனது மாமாவான சொரூபானந்தரையே குருவாக ஏற்றுக் கொண்டார் என்று இருக்கும். இந்த வரலாறு உண்மை இல்லை. இதை சான்றுகளுடன் கீழே பார்ப்போம்.
இரண்டாம் வரலாறு:
1953ஆம் ஆண்டு கோவிலூர் மடம் பதிப்பித்த புத்தகத்தில் உள்ளது.இது சமய மார்க்கத்தில் வரும் குரு பரம்பரையை அடிப்படையாகக் கொண்டது.அந்த வரலாறு பின்வருமாறு.
கைலாயத்தில் எழுந்தருளிய உமாமகேசர் முதலாசாரியர் பின்னர் நந்திகேசர், சனற்குமாரர், வியாசர், சூதரிஷி, கடவுள்நாதர், தருவூர்ச்சித்தர், அருள்முனிவர், கீழூர்முனிவர், பரமுனிவர், திருப்பனந்தாளர், மதுரைப் புஞ்சை முனிவர், வடமுனிவர், திருநடராசர், சிவப்பிரகாசர், சொரூபானந்தர், தத்துவராயர். என்ற குரு பரம்பரை வரலாற்றில் தத்துவராயரை நுழைத்துள்ளார்கள். இந்த வரலாறும் உண்மை அல்ல.
மகான் தத்துவராயர் எல்லாம் வல்ல சோதி வடிவான இறைவனை சுரூபானந்தர் என்றும் சிவபிரகாசர் என்றும் தத்துவன் என்றும் பரிபூரணர் என்றும் இன்னும் பலவகை திருபெயர்களால் குறிப்பிடுகிறார்.
தத்துவராயர் வரலாறு என்று அச்சிடப்பட்ட நூல்களில் இருப்பது போல் தத்துவராயரின் மாமா சொரூபானந்தராக இருந்தால், கை கால்கள் உடைய தனது மாமாவை எதற்கு தத்துவராயர் சோதி உருவே என்றும் சுடரே என்றும் குறிப்பிட வேண்டும்.
சொரூபானந்தரின் குரு, கை கால்கள் கொண்ட சிவப்பிரகாசராக இருந்தால் தத்துவராயர் எதற்கு சிவப்பிரகாசரை சோதி என்று குறிப்பிட வேண்டும்.
🎶 சான்று பாடல்கள்
சோதி யுருவே சுரூபானந்தச் சுடரே
அத்த னேயறி வானந்த நாடனே
சுத்தனே சுரூபானந்தச் சோதியே
சுருதிக டொடர் சுரூபானந்தச் சுடரே
அரிபிரமன் முதலாய வமரரெலா மலமாக்கத்,
தெரிவரிய செய்ய சிவப்பிரகாச னெழுந்தருளிப்,
பொருவதிலா நாயேனைப் பொருளாக்கி யுட்புகுந்து,
யரிவதுசெய் தாண்டவற்குப் பல்லாண்டு கூறுதுமே,
சோதிக்குப் பல்லாண்டு கூறுதுமே
அயனொடு மாயவ னுலகுக ளவர்க்கே
யருளுதன் மாறுத னினதரு ளெனவே
நயனுடை மொழிசெவிப் புலத்துமுன் னறிந்த
நானவ ராயனு பவித்தது மன்றிப்
பயனுடை யுருத்திரன் மகேசனு மாக்கிப்
பழித்தபின் சதாசிவ மளித்ததும் பழித்தாய்
சயமுறு மதிற்பரம் பொருளெனக் கருள்வாய்
தத்துவனே பள்ளி யெழுந்தரு ளாயே
காலமு ஞாதுருஞ் ஞானமு ஞேயமுங்
கண்டன னென்னி லிராசத மாயை
மேலொடு கீழ்பக்கம் விரவிய பின்முன்
விரிவுறு மவைபல மாயின வெல்லாஞ்
சாலவு மிரணிய கர்ப்பமு மிதுதான்
சதாசிவ கால பரன்கன விது வெப்
பாலுயர் காரண வுபாதியென் றருளப்
பரிபூர்ணனே பள்ளி யெழுந்தரு ளாயே
குரு துரிய மகான் தத்துவராயர்
மகான் தத்துவாராயரால் ஏற்படுத்தப்பட்ட தனித்த மார்க்கமான தத்துவ ஞான மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே தெரிந்தோ தெரியாமலோ இந்த வரலாறுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பொய் வரலாறுகளை நாம் இனி நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
மகான் தத்துவராயர் ஏற்படுத்திய தத்துவ ஞான மார்க்கத்தின் மூலம், மாத்திரை ⌛ஒன்றில் அருளும் சுரூபானந்த சோதியை வழிபட்டு குரு துரிய நிலைய அடைந்து சாதல் ⚰️ பிறத்தல் 👩🏽🍼 என்னும் இரு வினையில் இருந்து விடுதலை அடைவோம் வாருங்கள் !
📜 தத்துவ ஞான மார்க்கம் அறிமுகம்
தத்துவ ஞான மார்க்கம்
தத்துவ ஞான மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள சுரூபானந்த சோதி யார் ?
வேதங்கள் ஆகமங்கள் கீதைகள் ஸ்மிருதிகள் புராணங்கள் போன்றவற்றில் கூறப்பட்ட படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவோ அல்லது படைத்தல் காத்தல் என்று இரு தொழில்கள் செய்யும் விஷ்ணுவோ அல்லது படைத்தல் காத்தல் அழித்தல் என்று மூன்று தொழில்கள் செய்யும் ருத்திரன் ஆகிய சிவனும் அல்ல.
🎶 சான்று பாடல்கள்
வேதமு மாகம கீதை களு
மிருதி புராணமும் வேத மார்க்கர்
வாதமும் வல்லவ ருள்ளத் துள்ளு
மன்னியுந் தோன்றாத வள்ளல் வந்து
பூதமும் பவுதிகந் தானு மற்றும்
போதமே யாகிப் புரிந்து தோன்றிப்
பாத மளித்த பரிசு பாடிப்
பந்தடிக் கவ்வாரீர் பாவை நல்லீர்
குரு துரிய மகான் தத்துவராயர்
பிரம்மா,விஷ்ணு,ருத்திரன்(சிவன்), மகேசன்,சதாசிவம் போன்ற கை கால்கள் உடைய அணுக்களால் ஆன கடவுளர்களுக்கு அருள் செய்யும் இயற்கை உண்மை கடவுள் தான் சுரூபானந்த சோதி.
🎶 சான்று பாடல்கள்
அயனொடு மாயவ னுலகுக ளவர்க்கே
யருளுதன் மாறுத னினதரு ளெனவே
நயனுடை மொழிசெவிப் புலத்துமுன் னறிந்த
நானவ ராயனு பவித்தது மன்றிப்
பயனுடை யுருத்திரன் மகேசனு மாக்கிப்
பழித்தபின் சதாசிவ மளித்ததும் பழித்தாய்
சயமுறு மதிற்பரம் பொருளெனக் கருள்வாய்
தத்துவனே பள்ளி யெழுந்தரு ளாயே
குரு துரிய மகான் தத்துவராயர்
பிரம்மா விஷ்ணு ருத்திரன்(சிவன்) மகேசன் சதாசிவம் போன்ற ஐந்தொழில் செய்யும் கடவுளர்களாலும் சிந்தித்து அறிய முடியாத நிலையில் இருக்கின்றவர் தான் வேதியர் சுரூபானந்த ஜோதி.
🎶 சான்று பாடல்கள்
பூங்கழ னினைந்து புலம்பி யோங்கிய
மலரோன் மாலரன் மகேசன் சிவனெனப்
புலவோர் புகழும் அலகில் கீர்த்தி
ஐந்தொழிற் கடவுளுஞ் சிந்தனைக் கரிதென
குரு துரிய மகான் தத்துவராயர்
சுரூபானந்த சோதியானவர் அணுக்களால் ஆன ஆணும் அல்ல பெண்ணும் அல்ல அலியும் அல்ல அவர் பரிபூரண சோதி ஆவார்.
🎶 சான்று பாடல்கள்
பெண்ணலா யாணலா யன்றி யலியலா
யென்றனக்கும் காணலாய் வந்த கருணை
முத்தனை மூலத் தனிச்சுடரை முற்றுமாஞ்
சுத்தனைச் சோதி சுரூபானந் தக்கடலை
குரு துரிய மகான் தத்துவராயர்
நமது ஆன்மாவானது நனவு கனவு சுழுத்தி பரநனவு பரகனவு பரசுழுத்தி குருநனவு குருகனவு குரு சுழுத்தி போன்ற நிலைகளைக் கடந்து குரு துரிய நிலையை அடைய வேண்டும்.
🎶 சான்று பாடல்கள்
உற்றறி வெழ்வுள விருளகன் றதுபோ
லுதயம்வந் தெழுவுடு வொளியகன் றனவா
னற்றுட லுயிர்பொரு ளப்புடன் கவர்ந்து
நாண்மலர்த் தாளிணை நாயினேற் கருளிச்
சற்றென விசுவசாக் கிரகர ணங்கள்
சதுர்த்தெச செலவுநன் கலப்பழிப் பொன்றிற்
பற்றுத றிசைமுகர் பதமென வருளப்
பரிபூர்ண னேபள்ளி யெழுந்தரு ளாயே.(1)
அண்டரும் பரமெழ வறிவகன் றதுபோ
லாதவ னெழுவுடு மதியகன் றனவா
லெண்டிசை தொறுந்திரிந் தெனையறி யாதே
யெய்த்தெனை யாண்டுதை சத்தெனு மதிலே
கண்டுகொள் கனவையிவ் வணமென விருத்திக்
காமிய தாமதுட் கரணங்க ளுடனே
பண்டுல களந்தவர் பதமென வருளப்
பரிபூர்ண னேபள்ளி யெழுந்தரு ளாயே.(2)
பத்துட னாலையும் பதைப்பற விருத்திப்
பாரிருந் திவ்வண மென்றருள் புரிய
வத்தம துருவம தாயின தென்ன
வதுமிகு சுழுத்தியவ் வியத்தமா மாயை
யுத்தம வுருத்திர பதமுநற் பிரகிருதி
யுனதுட லாமுதற் பாழ்சகற் லட்சணை
பத்திய தறிபிரா ஜூனென வருளப்
பரிபூர்ண னேபள்ளி யெழுந்தரு ளாயே.(3)
விரிவுறு காரிய வுபாதிக ளெல்லாம்
வேறுசெய் தறிவிராட் புருடனை யெனவுங்
கரியது வாகிநின் றன்னவை முழுதுங்
கழன்றன சம்சர்க்க வாக்கிய மதனாற்
றுரியம துனையறி தொம்பத மகேசர்
சொல்லுமுற் பூரண சோதியி லென்னைப்
பரநன விற்கர மணியென வருளப்
பரிபூர்ண னேபள்ளி யெழுந்தரு ளாயே.(4)
காலமு ஞாதுருஞ் ஞானமு ஞேயமுங்
கண்டன னென்னி லிராசத மாயை
மேலொடு கீழ்பக்கம் விரவிய பின்முன்
விரிவுறு மவைபல மாயின வெல்லாஞ்
சாலவு மிரணிய கர்ப்பமு மிதுதான்
சதாசிவ கால பரன்கன விது வெப்
பாலுயர் காரண வுபாதியென் றருளப்
பரிபூர்ண னேபள்ளி யெழுந்தரு ளாயே.(5)
இதமக மறவிரு விவணமென் றருளி
யெழில்பர சுழுப்திகா ரணாதியிற் றதுவா
மதீதம திதுவசகல் லட்சணை யதனா
லாசறு சொல்லுறு பாழிரண் டாம்பாழ்
பொதுவது புகவது போந்தட மன்றிப்
போதமு மழுங்குமவ் வியாகிர்த மிறுகல்
பதியுடல் சதாசிவ பராசத்தி யருளப்
பரிபூர்ண னேபள்ளி யெழுந்தரு ளாயே.(6)
அருவமு முருவமு மாகிய பொருளே
யதீதமென் றருளிய தழித்தது வறிந்த
பொருளுணர் வதுபரம் விசிட்டவாக் கியத்தாற்
பொருவில்சிற் சுவலிதைதற் பதப்பொரு ளதுவா
மிருநில னெனமுத லருளிய பரிசே
யெழிலிரு பூரணத் தியல்குரு நனவிற்
பரமுற வெனதெழு பவமறுத் தருளப்
பரிபூர்ண னேபள்ளி யெழுந்தரு ளாயே.(7)
மலமறு குருபதக் கனவினின் மருவு
மாசறு மாணவ சாத்திக மதனா
லுலகமோ டுயிருதன் மாத்திர பரமா
உணர்ந்தது வேப்ரசா பத்தியென் றருளி
நிலவிய பரமம தாயவை முழுது
நிகழ்ந்ததின் றெற்கென நெடியவர் முதலே
பலவுல குண்டது மிதுவென வருளப்
பரிபூர்ண னேபள்ளி யெழுந்தரு ளாயே.(8)
சீரணி சகதசகல் லட்சணை யதனாற்
செகமுழு துண்டதொர் செருக்கற மிகவே
யேர்குருசுழுத்தியி லிருத்துப சாந்த
மிருபதப் பொருளுமொன் றாக்கிநின் றொளிர
வோருட லுயிரறி யொண்பர முழுது
மொன்றுமுப் பாழுரை யிறந்திட மதுவாய்ப்
பாரியல் சமைவுநற் பிருதுவியென் றருளப்
பரிபூர்ண னேபள்ளி யெழுந்தரு ளாயே.(9)
ஆரண முடிவினி லசிபதப் பொருளை
யருளுமுப் பூரண பூணாபி ஷேகச்
சீரணி யடிகளென் சென்னியிற் சேர்த்திச்
செறிதர வகண்டவாக் கியமத னாலப்
பூரண துரியமென் மோனநல் விழியாற்
புணர்குரு சத்திய மாதியுற் பலத்தின்
பாரென நடித்துனி லயிக்கிய மாக்கும்
பரிபூர்ண னேபள்ளி யெழுந்தரு ளாயே.(10)
குரு துரிய மகான் தத்துவராயர்
தத்துவ ஞான மார்க்கத்தின் மூலம் சுரூபானந்த சோதியை வழிபட்டு குரு துரிய நிலையை அடைந்து சாதல் பிறத்தல் என்ற இருவினையில் இருந்து விடுபட்டு திருமேனி பெற்று மரணத்தை வென்று வாழலாம் !
🎶 சான்று பாடல்கள்
சாதலென்றும் பிறத்தலென்றுந் தடுமாறு மிருவி னையின் றளையை வாங்கி,
யாதலென்று நடராசன் றிரு வுருவ மெனக்களித்தா னச்சோ வச்சோ
குடிமைகுல மாச்சிரமங் கோத்திர சூத் திரமனைத் துங்குலைந்து போக,
வடிமைகொண்ட நடராசன் திருமேனி யெனக்களித்தா னச்சோ வச்சோ
குரு துரிய மகான் தத்துவராயர்
📝 தத்துவ ஞான மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் செய்ய வேண்டியவை:
🔸 இதற்கு முன் தாங்கள் பின்பற்றிய சமயங்கள் மற்ற மார்க்கங்கள் அதில் கூறப்பட்டுள்ள ஆச்சாரங்கள் போன்றவற்றிலிருந்து தங்களை விடுதலை செய்து கொள்ள வேண்டும்.
🔸 கல் உலோகங்கள் போன்ற அணுக்களால் செய்யப்பட்ட சிலைகளை வழிப்படக்கூடாது.
🔸 நெருப்பு சூரியன் சந்திரன் போன்ற அணுக்களை வழிபடக்கூடாது.
🔸 தவம் யோகம் போன்றவைகள் செய்பவராக இருந்தால் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.ஏனென்றால் நாம் பயணிப்பது ஞான மார்க்கத்தில்
🔸 மாமிசம் உண்பது உயிர்க்கொலை செய்வது போன்றவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
🔸 சுரூபானந்த சோதியை துதி செய்து அவரின் பெருமையை பாடி நமது சிறுமையை அவரிடம் முறையிட்டு எளிமையாக அருள் பெறலாம்.
🥰 சுரூபானந்த சோதியின் பெருமையை பாடுவது:
🎶 எடுத்துக்காட்டு பாடல்கள்
ஆதியனே நின் னளவிது வென்ன வறிவரிதா
நீதியனே நில நீரெரி கானெடு வானமதாஞ்
சோதியனே சொரு பானந்த நாத சுருதியெல்லா
மோதிய நேர்மை கடந்தவுன் பாதமென் னுள்ளத்ததே.
உள்ளங் கரைவித் தொழியா வுணர்வா முலப்பிலின்ப
வெள்ளந் தனைத்தந்த வேதியனே நின்றன் மெய்யடியார்
தெள்ளென்ற சிந்தையின் வீற்றிருக் குந்திருப் பாதந்தந்து
கள்ளம் புகுநெஞ்ச னாமடி யேனையுங் காத்தருளே.
காக்கிலெ னென்னைக் கடைக்கணி யாவினிக் கைவிடினென்
றாக்கற நின்ற வெறுந்தனி யேநின் சரணிரண்டு
நீக்கவொ ணாதுகண்டாய்நிம லாவென்ற னெஞ்சினின்றும்
போக்கதிலாய்வர வின்றிநின் றாய்பரி பூரணனே.
பூரணனே யுல கெல்லாம் படைத்துப் புரந்தழிக்குங்
காரணனே கம் லாசனன் வானவர் கண்ணுதலோ
னாரண னேத முறநடு வேயென்னை நாடிவரு
மாரண னேநின்னை யானக லாவன் பளித்தருளே.
அன்பே சொருபானந்தச் சுடரே யகிலத்தின்
முன்பே பின்பே முடிவீ றறியா முதலோனே
யென்பே றுநினைந் திமையோ ரலம்வந் திடவிங்கோர்
வன் பேயனையே னென்பா லன்பா வந்தாயே.
ஆதியுமா யந்தமுமாய் நின்றாய் போற்றி
யாதியந்த மில்லாத வமலா போற்றி
சோதியுமா யிருளுமாய் நின்ற தூய
சொருபானந் தச்சுடரே போற்றிபோற்றி.
குரு துரிய மகான் தத்துவராயர்
😭 நமது சிறுமையை அவரிடம் முறையிடுவது:
🎶 எடுத்துக்காட்டு பாடல்கள்
கயவேனை யாண்ட கருணைக் கடலே
செய போற்றி செம்பொற் கழல்
கருவுருவிற் பிறந்தடியேன் கழியா வண்ணங்
கருணை வடிவாய் வந்த கழலே போற்றி
யென்னையு மோர் பொருளாக வாண்டு கொண்ட
வெலையிறிருக் கருணையனே யிறையே போற்றி
கருணை யாகின்ற கண்ணுடைக் கரும்பே
கன்னலே நற் கலைக ளளப்பொணாப்
பொருளனே புலை யேனையும் பொருளாப்
பூமி தன்னில்வந் தாண்டதோர் புனிதா
சாத்திரங் கற்ற சதுர ரெல்லாந்
தத்துவ மொன்று பலவ தென்று
காத்திர மாகக் கழிந்து போகக்
கருணைக் கடல்கண்ணிற் காண வந்து
நாத்திரங் கத்தன் புகழே பாடி
நற்றொண்டு செய்திட நாயே னையும்
பார்த்தருள் செய்த பரிசு பாடிப்
பந்தடிக் கவ்வாரீர் பாவை நல்லீர்
நாயேனைப் பொருளாக நயந்தருளும் பெருமாள்
ணம்மைநம்மி லேநமக்கு நல்கியிடும் பெருமாள்
பேயான வெனையாண்ட பெருங்கருணைப் பெருமாள்
பேணித்தொழு மடியவரைப் பித்தேற்றும் பெருமாள்
குரு துரிய மகான் தத்துவராயர்
📚 மகான் தத்துவராயர் பார்வையில் சமயங்கள் சாத்திரங்கள் சோதிடம் மற்றும் வாசியோகம்
ஆறு வகை சமயங்களைப் பற்றி:
ஆறு சமயங்கள் என்று கூறப்படும்,
- சைவம் - சிவனை வழிபடுவது
- வைணவம் - விஷ்ணுவை வழிபடுவது
- கௌமாரம் - முருகனை வழிபடுவது
- சௌரம் - சூரியனை வழிபடுவது
- கணபதியாம் - விநாயகரை வழிபடுவது
இந்த ஆறு சமயங்களும் மலம் என்கின்றார்.
🎶 சான்று பாடல்
இப்படிவே றறவிறைவன் யாவையுந்தா னாயிருக்க
மெய்ப்படவே சமயங்கள் பிணங்குவதென் விளம்பேடி
செப்பிடே திமிரமுறு நயனத்தோர் மதிபலவா
மப்படியே யறுசமய மலத்திடுங்காண் சாழலோ
குரு துரிய மகான் தத்துவராயர்
சுரூபானந்த சோதியானவர் அனைத்து சமயங்களையும் கடந்து நிற்பவர் என்கிறார்.
🎶 சான்று பாடல்
சமயத்தைச் சாடிய தண்டு
சகலமுந் தாங்கிய தண்டு
சுமையற்றிருக்கின்றதண்டு
சுரூபானந்தனார் தந்த தண்டே
குரு துரிய மகான் தத்துவராயர்
பேய் பிடித்த தேர்போலான சமயத்தினரின் பெரும் கூக்குரல்களை (வாதங்களை) நான் கேட்காதிருக்கும் வண்ணம் என்னை சுரூபானந்த சோதி காத்தருளினார் என்கின்றார்.
🎶 சான்று பாடல்
உடம்போ டிருந்தே யுடம்பின்மை காணக்
திடந்தா னெனக்களித்த தேவே - யடங்காத
பேய்த் தேர்ச் சமயத்தார் பேரரவங் கேளாமை
தீர்த்தாய் சிறியேனைக் கா
குரு துரிய மகான் தத்துவராயர்
ஒரு கணத்தில் ஒரு சொல்லால் சுரூபானந்த சோதி அனைத்தையும் உணர்த்தி விடுவார். அதைவிடுத்து சாத்திர நூல்களைப் படிப்பதால் என்ன பயன். சாத்திரங்களின் மூலம் இதுதான் இறைவன் என்று அறிந்து கொள்ள முடியாது.அது வெறும் வார்த்தைகளின் கலகலப்பு தான் என்கின்றார்.
🎶 சான்று பாடல்
மாத்திரையி லொருமொழியான் மாமுனிமீட்டு ணர்த்திடுமேற்,
சாத்திரநூற் பார்ப்பதனாற் றருபயனென் சாற்றேடி,
சாத்திரத்தாற் றற்பரத்தைத் தானிதென வறியவொண்ணா,
வார்த்தையிது கலகலென வடித்திட லாஞ் சாழலோ
குரு துரிய மகான் தத்துவராயர்
நீங்கள் படித்த முடிவில்லாத சாத்திரங்கள் பாடை மேல் ஏறுவதற்கு உதவியதா ? பிடாரிகளே ! என்கின்றார்.
🎶 சான்று பாடல்
ஏடு கொண்டு பாடையேறளவு மிடையின்றி
யெல்லை யில் சாத்திரங்கள் பாடமதோதித்
தலைபறியப் பகருதற் கோதும் பிடார நீரே
குரு துரிய மகான் தத்துவராயர்
சாத்திரம் கற்றவர்கள் எல்லாம்,தத்துவம் ஒன்றே, அது பலவாகும் என்று காலம் கடக்கும் வரை வாதிட்டுக் கழிப்பார்கள். வாதங்களில் காலத்தைக் கடக்கும் சாத்திரிகளை விட்டு, கடவுளின் கருணையை நேரடியாகக் கண்டு, அவர் புகழைப் பாடி, அவர் எனக்கு செய்த அருளின் பெருமையைப் பாடி பந்தடிக்க வாரீர் என்கின்றார்.
🎶 சான்று பாடல்
சாத்திரங் கற்ற சதுர ரெல்லாந்
தத்துவ மொன்று பலவ தென்று
காத்திர மாகக் கழிந்து போகக்
கருணைக் கடல்கண்ணிற் காண வந்து
நாத்திரங் கத்தன் புகழே பாடி
நற்றொண்டு செய்திட நாயே னையும்
பார்த்தருள் செய்த பரிசு பாடிப்
பந்தடிக் கவ்வாரீர் பாவை நல்லீர்
குரு துரிய மகான் தத்துவராயர்
புத்தன் என்னும் மூடன் !
🎶 சான்று பாடல்
ககனமு மான்மாவுங் காரணனு மில்லை
சகலமு மாம நித்தஞ் சார்வார் — பிறவி
வகை வினை யுண்டு மதிபொன்ற மாய்தல்
சுகதன்றன் முத்தித் துணிவு.
காணமே யான்மாக் கணபங்கி நித்தப்
புரணமோ வீசன் வான் பொய்யே — மரணமே
வீடென்றா னாத்திகரின் வேறேவிப்
புத்தனெனு மூடன்றான் மொழி
குரு துரிய மகான் தத்துவராயர்
அறிவு தெளிவுப்பெற்றவர்கள் சந்தன குங்குமம் போன்றவற்றால் தங்களை அலங்காரம் செய்து கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. புற சடங்குகளால் எந்தப் பயனும் இல்லை என்கின்றார் தத்துவராயர்.
🎶 சான்று பாடல்
சந்தன குங்கு மங்கள் புழுக்கில்
தண்பளி தஞ்சொ ரிந்து மகிழ்விலர்
நொந்தன கொண்ட ரிந்து நுகரென
நொந்திலர் முந்தை யென்று நகுவரே.
குரு துரிய மகான் தத்துவராயர்
மேலே சூரியன், நிலா, புதன், வியாழன், சுக்கிரன், சனி, மேலும் சேரும் ஆறு கிரகங்கள் — இவை எல்லாம் மேடம் முதலான பன்னிரண்டு ராசிகளில் சுழன்று கொண்டிருக்கும். அவை நாள்தோறும் மாறி வரும் விதத்தை கணித்து இதுதான் வாழ்க்கையின் நாளும் விதியும் என கூறும் சோதிட பேய்கள் சில என்று கூறுகிறார்.
🎶 சான்று பாடல்
மேலிரவி யிந்து சேய்புதன் வியாழன் வெளி மந்தன் நீறு அறு
மேட முதல்வந்த ராசி பை வேறுபட லின்றி நாளெழு
நாலில் வருகின்ற வாறு கணாச நிகழ்ச்சி நனாதிக
ணாடியறைகின்ற சோதிட நாளும் அறைகின்ற பேய்சில.
குரு துரிய மகான் தத்துவராயர்
வாசி ஊதி,கண்ணில் பீளை வழிய, உடை கிழிந்து, உணவு தேவைக்குக் குறைந்து, உடலில் உள்ள தாதுக்கள் கலங்கும் வகையில் தலைமயிரைப் பறிக்கும்படி யோகம் செய்ய வேண்டும் என இறைவன் கூற மாட்டார். அதாவது கடுமையாக உடலை வருத்திக்கொண்டு செய்கின்ற யோகங்களை புண்ணியமூர்த்தி ஆகிய இறைவன் கேட்பதில்லை. இதுபோன்ற சாதனங்கள் இறைவனால் ஏற்படுத்தப்பட்டதும் இல்லை என்கின்றார்.
🎶 சான்று பாடல்
ஊதிக்கண் பீளை சாறி யுடையொழிந் துணவு மாறித்
தாதுக்கள் கலங்கும் வண்ணந் தலைமயிர் பறிக்கச் சாற்றான்
ஏதுக்கு மீய வேண்டா னீந்திடிற் பாவ மென்னான்
போதிக்கண் ணீழன் மன்னும் புண்ணிய மூர்த்தி யெம்மான்.
குரு துரிய மகான் தத்துவராயர்
🎶 மகான் தத்துவராயர் அருளிய பாடல்கள்
📖 பாடல்கள் அட்டவணை
| பாடலின் தலைப்பு | வரிகள் | முழுமையாகப் படிக்க |
|---|---|---|
| திருவடிமாலை | 65 | படிக்க |
| திருவருட்கழன் மாலை | 96 | படிக்க |
| போற்றி மாலை | 88 | படிக்க |
| புகழ்ச்சி மாலை | 87 | விரைவில் |