தத்துவ ஞான மார்க்கம்
🙏 போற்றி மாலை
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
கலிவெண்பா
1.வானாடர் கோனு மலரோனு மாலோனுங்
கானாடு கின்றநுதற் கண்ணோனுந் - தாநாட
2.மாட்டார் மதிமயங்கி மாமறையி னீறுகளுந்
தாட்டா மரைதேடித் தானரற்றச் - சேட்டார்
3.முனிவரெலாங் காணார்போய் முந்நீரி னுள்ளே
பனிவருங்கா லத்துப் படிந்துந் - துனிபெருகுங்
4.கோடையினில் வெய்ய கதிருங் கொடுந்தீயும்
பாடு மெரியப் பதைபதைத்தும் - வாடித்
5.தலைகீழாய் நின்று தபித்துச் சலமோ
டிலைகாய் கிழங்குகாற் றெய்திற் - றலமாகக்
6.கொண்டயின்றுங் காடுங் குமிடு மிடமாகக்
கண்டுயின்று மிங்ஙனே காயத்தைக் - கொண்டு
7.படக்கடவ வெத்தனையும் பட்டாலும் பட்டு
விடக்கடவ ராக விதித்திங் - கடற்புலன்க
8.ணீத்தார்க டங்க ணினைவுங் கடந்தகமே
பார்த்தார்க் கதிதூரப் பட்டிருண் - டேத்துவார்க்
9.கின்ன தெனவறிய வில்லா வியல்பதனா
லன்ன வரையு மயர்ப்பித்துத் - தன்னுருவ
10.மாணென்ன வன்றி வலியென்னப் பெண்ணென்னப்
பேணும் வகையின்றிப் பேசுங்காற் - காண
11.வொருவழியு மின்றி யுரையுணர்வுக் கெட்டாத்
திருவடிவை யுள்ளங்கைச் சேர்ந்த - தொருகனிபோற்
12.கண்டோமென் பார்காட்சி யாவையுங் கைகடந்
துண்டோ விலதோவென் றோர்வுமறத் - திண்டாடப்
13.பண்ணிப் பரம கருணையினா லோருருவாய்
நண்ணித் திருஞான நாட்டத்தைத் - திண்ண
14.மளித்திடினு மன்பர்க் ககமதிப்பின் முன்வந்
தொளிப்படுமா போலே யொளித்தும் - வெளிப்படா
15.யெம்பிரா னென்றிரந்தும் யாவர்க்கு மெய்தரிய
தம்பிரா னாயேற்கித் தாரணிக்கே - செம்பொற்
16.கழல்காட்ட வாகமெலாங் கண்ணாகக் காணே
னழல்காட் டியமெழுகே யாகே - னெழில்போற்ற
17.வாயா யிரங்காணேன் மாறாப் பெருங்களிவந்
தோயா துருகு முளங்காணேன்- காயம்
18.புரையுள்ள வெல்லையும்போய்ப் பூரிக்கக் காணேன்
கரையுந் திறந்தானுங் காணேன் - றிரைகொண்ட
19.வாழிபோ லார்த்தோங்கி யாகாயத் தோடுநில
னேழையே னாலித் தெழுந்துவிழேன் - வாழே
20.லுருகேன் பெருகே னுடையானே யுன்னிப்
பருகேன் பரவேன் பதையே-னொருகால்
21.விழிபனியேன் வெய்துயிரேன் மெய்சோரேன் விம்மே
னெழிவறவே நின்றுருக்கி யூனைக் - கழிவுறவே
22.பாரேன் பயந்துள்ளம் பாதாதி கேசமுற
வேரேன் வியவேன் விதிர்விதிரே - னீராய்க்
23.கரையே னெனதுடலங் கம்பிக்கக் காணேன்
விரையேன் மலர்ப்பதத்தே வீழே -னுரையுங்
24.குழறேன் தழுதழுத்துக் கூத்தாடே னெஞ்சைக்
கழறேன்கண் ணீர்சொரியக் காணே - னுழரே
25.னொளியே யடியே னொருவியப்புங் காணேன்
களியேனான் செய்யும்வகை காணேன் - றெளிவிலே
26.னாற்ற வறிகிலே னத்தா கழல்போற்றி
தோற்று சுரூபச் சுடர்போற்றி - நாற்றிசையுங்
27.கீழ்மேலு மெங்குங் கிளரொளியா யப்புறம்போய்ச்
சூழ்மேவி நின்ற சுடர்போற்றி - யூழ்மேவு
28.காயங் கரைவித்த கண்போற்றி காற் றியமான்
றோயந் தரைவிண் சுடர்மூன்று - மேய
29.வருவித்த வல்லபம் போற்றி யவைமாற்
றொருவித் தகம்போற்றி யுன்னைத் - தெரிவித்த
30.வாபோற்றி நின்னை வளைவோ ருளம் விட்டு
நீபோக் கிலாத நிலைபோற்றி - தீபத்
31.தொளியின் றெளிவாய வோருருவம் போற்றி
களியொன் றியகழல்கள் போற்றி - யெளிவந்து
32.பேயேனை யாண்டு பிழைபொறுத்தென் பேதைமையை
நீயே தவிர்க்கு நெறிபோற்றி - தாயேயென்
33.றந்தையே போற்றி தமியேனை யாட்கொண்ட
வெந்தையே யீசா விறைபோற்றி - பந்த
34.மறுத்தானே போற்றி யடியேன் பிறப்பை
வெறுத்தானே போற்றி வினையான் - மறுத்துன்
35.றிருவருணோக் காலெனது சித்தந் திரித்த
வொருவிரகே யுத்தமனே போற்றி - பருகமிர்த
36.மானானே போற்றி யடிநாயே னெஞ்சிடையே
தேனாகித் தித்திக்குஞ் சீர்போற்றி - யானா
37.ரவனியின் வந்தாள வாற்றுகிலேன் போற்றி
சிவனயன்மா லாந்தேவே போற்றி - தவமிலியே
38.னென்செய்தேன் போற்றி யிறைபோற்றி யெப்பொருட்கு
முன்செய்தா னேமுழுது நீபோற்றி - நின்செயலிங்
39.காரறிவார் போற்றி யனைத்துமா யல்லாத
பேரறிவே போற்றிவெறும் பேயேற்குப் - பாரறியத்
40.தந்தாய் மலர்ப்பாதந் தம்பிரா னேபோற்றி
சிந்தா குலந்தவிர்த்த சீர்போற்றி - கொந்தாருந்
41.தாளிணைகள் போற்றி தரிக்கிலேன் காண்போற்றி
யாளெனையுங் கொள்வதழ கோபோற்றி - மாளாமே
42.காத்த கழல்போற்றி நாயேன் கவலையெலாந்
தீர்த்த விழியின் றிறம்போற்றி - வார்த்தை வெறு
43.மொன்றாலே யெண்ணிறந்த வூழிவரு மென்பவத்தைக்
கொன்றானே போற்றி குறிபோற்றி - பொன்று
44.மிதமோ டகமேவு மென்மயலை மாய்த்த
மதஞான வாரணமே போற்றி பதகக்
45.கலையோ தலைவலைகள் காண்டற் கரிய
நிலையேயென் னின்மலனே போற்றி - சிலைபோலு
46.மென்னெஞ் சினைநெகிழ்த்த தென்செய்த வாபோற்றி
முன்னஞ்செய் தாய்மூர்த்தி யேபோற்றி - யின்னந்
47.தெளிகிலேன் போற்றி தெளியாத வென்னை
விளிகிலேன் வித்தகனே போற்றி - யளிபவர்த
48.முள்ளத் தமிர்தே யுடையானே யோபோற்றி
தெள்ளத் தெளிவே செயபோற்றி - கொள்ளக்
49.குறைவிலா வின்பக் குணக்கடலே போற்றி
யிறைவனே யென்னுரைக்கேன் போற்றி - முறையோ நான்
50.கைம்மாறு காணேன் கருணைப் பெருங்கடலே
யம்மானே போற்றி யடிபோற்றி - பொய்ம்மாயந்
51.தீர்த்தாய் பிரானே பிரானே செயபோற்றி
காத்தாய் கருணா கரபோற்றி - மூர்த்தியே
52.மூலமே போற்றி முழுதழிய வுள்புகுந்த
கோலமே போற்றியெனைக் கோப்பழித்த - சீலத்தின்
53.வித்தகமே போற்றி வினையேனை நின்றுருக்கு
முத்தமனே போற்றியுடை யாய்போற்றி - பத்திக்
54.கடலா மடியவர்முன் காசினிமேன் மாய
வுடலா னதைநானென் றுன்னி - யடலார்
55.புலனெறியே போவேனைப் புண்ணியநீ யாள்கை
நலனதுவே நாயகனே போற்றி - சலமதிபோ
56.னின்று குலைகுலையு நெஞ்சந் திரித்தவிர
கொன்று மறியே னுரையிறந்த - குன்றமே
57.போற்றி புனிதாநின் பொற்கழலே யெப்பொழுதுஞ்
சாற்ற வளித்த சதுர்போற்றி - தோற்றமெலா
58.நீயேகாண் போற்றி நினைவணங்கா தாரெல்லாம்
பேயேகாண் போற்றிவெரும் பித்தனே - னாயேனான்
59.சொல்லும் வகையறியேன் சோத்தெம் பிரான்போற்றி
கல்லு மனங்கரைத்த கண்போற்றி - யல்லும்
60.பகலு மடியேனை யாண்டவா பார்மேற்
புகலும் வகையருளாய் போற்றி - சகலமு
61.முன்னிற் பிறந்திறக்க வொன்றிற் பிறந்திறவாத்
தன்னந் தனியேநின் றாள்போற்றி - யென்னொப்பி
62.லென்னையாட் கொண்ட விறையே முறைபோற்றி
முன்னையாய்ப் பின்னாய் முழுதுமாய் - மன்னும்
63.பொருளாய பூரணனே போற்றிதாள் போற்றார்க்
கிருளா யிருப்பவனே போற்றி - யருளேது
64.மற்றேன்காண் போற்றி யடியே னடையவுனைப்
பெற்றேன் பிழைத்தேன் பெருமானே - சிற்றின்பம்
65.வேண்டாவேண் டாபோற்றி வெவ்வினையே னுள்ளுருக்கி
யாண்டானே போற்றி யடிபோற்றி - தூண்டுசுடர்ச்
66.சோதி துறந்தோர் துணையே கழல்போற்றி
யாதி யறிவே யருள்போற்றி - பேதையேன்
67.றோழாநின் செம்பொற் றுணைமலர்த்தாள் காணாநான்
வாழேன்காண் போற்றி மதிபோற்றி -யேழையே
68.னாற்றுகிலேன் போற்றி யருளாய் கழல்போற்றி
தேற்றமெனக் குன்சே வடிபோற்றி - போற்றி
69.சுரூபானந் தச்சுடரே யென்றுணையே போற்றி
திருவேயென் செய்தவமே போற்றி - கருவாய
70.மூலமே போற்றி முடிவே யடிபோற்றி
ஞாலமே விண்ணே நலம்போற்றி - தூலமே
71.நுண்மையே போற்றிமிகு நுண்ணுணர்வோர் தங்கருத்தி
னுண்மையே போற்றி யொளிபோற்றி - கண்மேவிக்
72.காண்பதெலா நீயொழியக் காணேன் கழல்போற்றி
பூண்பதினி யுன்பொற் கழல்போற்றி - யாண்பெணலி
73.யல்லானே போற்றி யடியேன் பிழை பொறுக்க
வல்லானே போற்றி மதியிலேன் - பொல்லாதே
74.னென்றறிந்து மாட்கொண்டாய் போற்றிநீ யெவ்விடத்து
நின்றறிந்த நின்மலபோ தம்போற்றி - யொன்று
75.மறியே னுடையா யடைக்கலநான் போற்றி
சிறியே னிடர்சிதையாய் போற்றி - குறியேது
76.மில்லாத வின்பப் பெருங்கடலே யேத்தினர்க்கு
நல்லா யெனையா ணயம் போற்றி - பல்லாண்டு
77.போற்றி சயசய பல்லாண்டு பல்லாண்டு
சீர்த்திற மேதுந் தெரியாதேன் - றோற்றியவா
78.விண்ணப்பஞ் செய்தவிது வேதங்கள் கண்டுதுதி
பண்ணப் பெறாதமலர்ப் பாதத்தே - நண்ணுமே
79.யென்போல வெல்லாப் படியாலுங் கீழெனக்கு
முன்போ ருயிரில்லை முற்றுணரிற் - பின்பு
80.முளதாகா திப்பரிசே யுள்ளேனை யாண்ட
பளகாவென் பாக்கியமே போற்றி - யுளகாலங்
81.கொண்டாடி நாவுன் குணம்பரவ நின்கோலங்
கண்டார நாயேன்றன் கண்ணிரண்டு - மண்டாநின்
82.கீர்த்தியினை யெப்பொழுதுங் கேட்டென் செவியுவப்ப
மூர்த்தி கழலே முடிசூட - வேத்துதற்கு
83.வானவருங் காணாத மாணிக்கப் பாதமலர்
ஞான மணம்பருக நாசியென - தூனடைய
84.வுள்ளமாய் நின்றுருக வோருடம்புங் கண்ணாகி
வெள்ளமாய் நீர்சொரிய நான்வியப்ப - வள்ளலே
85.யுன்னடியா ரேவற் றொழிலுவந்து நான்செய்யப்
பொன்னடிதா போற்றி புகழ்போற்றி -யின்ன
86.மதுவே யிரக்கின்றே னாயிரங்கால் போற்றி
யிதவே பெறிலடியே னென்றுங் - கதியேது
87.மில்லாப் பிறவியிலே யென்றும் பிறந்தாலும்
பொல்லாதென் றீதே புரிபோற்றி - கல்லாக்
88.கயவேனை யாண்ட கருணைக் கடலே
செயபோற்றி செம்பொற் கழல்.