தத்துவ ஞான மார்க்கம்

🙏 சிவ சிவ சங்கீர்த்தனம்

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

எண்சீர்க்கழி நெடி லடியாசிரியவிருத்தம்

1.அளவி றந்தது வருள்சிவ சிவசிவ

அகநி றைந்தது வடியிணை சிவசிவ

வுளமி றந்துயி ருணர்வொடு பரமற

வொளிரு கின்றது சிவசிவ சிவசிவ

களவு துன்றிய கனகலெ னுளநிறை

கழல்கொ ளன்பது கரையிலை சிவசிவ

தெளிவி னன்குறு தெளிதரு மனுபவ

திதிதி கழ்ந்தது சிவசிவ சிவசிவ


2.உபநி டங்களு முவமையில் கலைகளு

மொருமை யிங்குற வறைதரு மொருபொரு

ளபய நன்குற வருளிட வுருவுகொ

டதுந டந்தது சிவசிவ சிவசிவ

வுபய வின்பமும் முவகையு மொழிவற

வொளிரு கின்றது சிவசிவ சிவசிவ

நிபம தொன்றற நிகழனு பவதிதி

நிகரி றந்தது சிவசிவ சிவசிவ


3.வகையி றந்தது சிவசிவ சிவசிவ

மனமி றந்தது சிவசிவ சிவசிவ

வகம தொன்றிய வனுபவ திதியமிர்

தளவி றந்தது சிவசிவ சிவசிவ

தகுவ தன்றுள வடியவர் திரளொடு

சலனை வஞ்சனை யெனையுமொர் பொருளென

விகமெ ழுந்தரு ளிடலது கருணையி

னெலையி றந்தது சிவசிவ சிவசிவ


4.ஒளிரு நன்கழ றுதிசெய வரியந

லுபநி டங்களு மொருவிர கறிகில

துளப னன்குறு மயன்முத லிமையவர்

தொடர்வு மஞ்சுவர் சிவசிவ சிவசிவ

யளிய தன்கழ லெளிதினி லளவரு

மதிச யங்கொடு துதிசெய வெனையருள்

வளநி னைந்தென துளமுக விறைகழல்

வருசு தந்தர வலிசிவ சிவசிவ


5.அளவை கொண்டுந லிறைகழ லடைதர

வலம ருங்கல ருளவலி சிவசிவ

வளமில் வன்கலு மிவருள மதில்வசம்

வருதல் சங்கைய திலைசிவ சிவசிவ

வளர வன்பது விரகழி யடியவர்

மதியி லங்கிடு மிறைகழல் சிவசிவ

களவ நெஞ்சுடை யெனையுந லடிமைகொள்

கருணை யங்கடல் சிவசிவ சிவசிவ


6.உருகு நெஞ்சுடன் மயிர்புள கிதம்வர

வுரைத ளர்ந்தழு துவகைசெ யடியவர்

பருகு மின்பம திறைகழல் சிவசிவ

பகலொ டிங்கிர வதுமிலை சிவசிவ

திருகு வன்புறு மெனதுள மிதுதிகழ்

திருவு ளஞ்செய்து செறிவிட மிதுவென

வருத லென்செய்த படிசிவ சிவசிவ

வளமை யென்புகல் வதுசிவ சிவசிவ


7.நடலை கொண்டிர வொடுபக லறமிக

நடுந டுங்கிடு மெனதுள மதுதனை

முடலை வன்பிண வுடலழி பொருளுயிர்

முழுதை யுங்கொடு சிவசிவ சிவசிவ

கடலை யின்பந லமிழ்தினை யெனதுறு

கரத லந்திகழ் மணியென வருளிய

படியி தென்செய்த படிசிவ சிவசிவ

பரம பண்டித னருள்சிவ சிவசிவ


8.ஒருக ணந்துய ரறும்வகை யதுவற

வுகளும் வன்பவ வுததியின் மடிதரு

மிருக ணின்றிய வுறுசெவி டுரையுமி

லிழிசெய் வன்பிண வெனையுமொர் பொருளென

வருத ருந்திரு வருள்சிவ சிவசிவ

வடிவு கொண்டவ லபமிது சிவசிவ

வருள்க ணன்றியொர் பொருளிலை சிவசிவ

வமல னென்செய்த படிசிவ சிவசிவ


9.உளம தொன்றிய வொருநிதி சிவசிவ

வுடனி கழ்ந்திடு மொளியது சிவசிவ

வளவி றந்தந லமிழ்தது சிவசிவ

வகில மின்றிய வருள்சிவ சிவசிவ

வளம்வி ளம்பிட விரகிலை சிவசிவ

வணம தொன்றிடும் வகையிலை சிவசிவ

வெளிதி கழ்ந்தில கியதுதி சிவசிவ

விகிர்த னென்செய்த படிசிவ சிவசிவ


10.கருணை யம்புய முகமலர் சிவசிவ

கருணை யங்கட லிருவிழி சிவசிவ

வருண யந்திடு மடியிணை சிவசிவ

வழகு துன்றிய வடிவது சிவசிவ

விருண யந்திடு மிடருறு பிறவியை

யெறியு மெந்தைதன் மறமது சிவசிவ

திருந டன்றன தருள்சிவ சிவசிவ

சிவநி கழ்ந்தது சிவசிவ சிவசிவ