தத்துவ ஞான மார்க்கம்
🙏 அபயம்
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
கலிவிருத்தம்
1.வேண்டே னிமையோர் பதமே விடமுந்
தீண்டேன் மணில்வாழ் சிதைபோ கமது
மாண்டே யறுவேன் மயறீர் வகைவந்
தாண்டா யடியே னபய மபயம்
2.வேண்டா மையைவேண் டுதலா கியகோள்
பூண்டே யுழல்வேன் புரைதீர் பொருளாத்
தூண்டா தொளிர்சோ தியதாம் வகைவந்
தாண்டா யடியே னபய மபயம்
3.பொய்யா முடலு முலகும் பொருளென்
றுய்யா வகையா லுழல்வே னுளமே
மெய்யே புகுதா விளையா விளைவா
மையா வடியே னபய மபயம்
4.போதோ னெடுமா லரன்வா னவரு
மேதே தெனவை யுறவே யெனையாண்
டீதே யிவனே யெனவந் தருளு
மாதா வடியே னபய மபயம்
5.துரிசா கியசுற் றமதா கியதொல்
லரவா டியெழுந் தணையா வகைதா
னுருவா யெனையாள் பவனே யொழியா
வருளா பரணா வபய மபயம்
6.தாய்தந் தைகுலம் பொருள்கல் வியெனும்
பேய்வந் துறவே பிறிதொன் றறியா
தோய்வந் துறுவே னுளமே யுணர்வே
யாய்வந் தவனே யபய மபயம்
7.தன்னால் விளையுஞ் சகசீ வபரந்
தன்னா லழியுந் தனதாம் விழியா
லென்னா லெனையென் னிலெனக் கருளு
மன்னே யடியே னபய மபயம்
8.வேதா கமமே முதனூ லலைவா
லீதா மிதுவன் றெனவோ திடுமப்
பேதா திகளா யொருபே தமிலா
வாதீ யடியே னபய மபயம்
9.அன்பா மிமையோ ரயர்வெய் திடவே
யின்பான் முருடா மெனையா ளவிரைந்
தென்போ லுருவா யெனையுண் டொளிரு
மன்பே யடியே னபய மபயம்
10.இருளே வெளியே யிழிவே யுயர்வே
தெருளே மருளே செறிவே புரையே
மருளேன் மனனே மனிவீ டறியா
வருளே யடியே னபய மபயம்