தத்துவ ஞான மார்க்கம்

🙏 சரணம்

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

எண்சீர்க்கழிநெடி லடியாசிரியவிருத்தம்

1.பவமற முனிவோனே சரணஞ் சரணம்

பகவற முழுதானாய் சரணஞ் சரண

மவமற வெனையாள்வாய் சரணஞ் சரண

மடியிணை தருவானே சரணஞ் சரண

நவமறு முணர்வேயுன் சரணஞ் சரண

நணுகரு மொளியேயுன் சரணஞ் சரணந்

தவமுறு பயனேயுன் சரணஞ் சரணஞ்

சயசய குரவாவுன் சரணஞ் சரணம்


2.உயர்வற வுயர்வோனே சரணஞ் சரண

முலகமொ டுயிரானாய் சரணஞ் சரண

மயர்வறி வறுநாதா சரணஞ் சரண

மவமுறி லணுகோனே சரணஞ் சரணங்

கயவரு ளிருளானாய் சரணஞ் சரணங்

கரதல மணியேயுன் சரணஞ் சரணஞ்

செயலறு முணர்வேயுன் சரணஞ் சரணஞ்

செயசெய குரவாவுன் சரணஞ் சரணம்


3.அறுசம யமுமானாய் சரணஞ் சரண

மறமற மகல்வோனே சரணஞ் சரணம்

வெறுமறி வுருவானாய் சரணஞ் சரணம்

விளைவறு விளைவேயுன் சரணஞ் சரண

மறுகளில் பதமேயுன் சரணஞ் சரண

மறுவறு மணியேயுன் சரணஞ் சரணஞ்

செறிதரு தெளிவேயுன் சரணஞ் சரணஞ்

செயசெய குரவாவுன் சரணஞ் சரணம்


4.படருறு வினைநாசா சரணஞ் சரணம்

படிமுதன் முழுதானாய் சரணஞ் சரண

மிடரற வெனையாள்வாய் சரணஞ் சரண

மெனையெனி லருள்வானே சரணஞ் சரண

முடலுயி ருணர்வானாய் சரணஞ் சரண

முருகுள நிறைதேனே சரணஞ் சரணந்

திடமுறு முணர்வேயுன் சரணஞ் சரணஞ்

செயசெய குரவாவுன் சரணஞ் சரணம்


5.களிமய லதுகாய்வாய் சரணஞ் சரணங்

கருதரு பரனேயுன் சரணஞ் சரண

மொளியினி லொளியேயுன் சரணஞ் சரண

மொழிவறு முணர்வேயுன் சரணஞ் சரண/p>

மளிதரு கனியேயுன் சரணஞ் சரண

மருள்பொழி யமுதேயுன் சரணஞ் சரணந்

தெளிதரு சிவமேயுன் சரணஞ் சரணஞ்

செயசெய குரவாவுன் சரணஞ் சரணம்


6.சுகமது வடிவானாய் சரணஞ் சரணஞ்

சுருதியின் முடிமேலாய் சரணஞ் சரண

மிகபர மறுமீசா சரணஞ் சரண

மிணையிலி யிறைவாவுன் சரணஞ் சரண

மகமுறை யமலாவுன் சரணஞ் சரண

மடியர்த மரணேயுன் சரணஞ் சரணஞ்

சகமது முழுதானாய் சரணஞ் சரணஞ்

சயசய குரவாவுன் சரணஞ் சரணம்


7.அறிவறி பவனானாய் சரணஞ் சரண

மறிபொரு ளதுவானாய் சரணஞ் சரண

முறிவறு சுகமேயுன் சரணஞ் சரண

முழுதுணர் முனியேயுன் சரணஞ் சரணங்

குறைவறு நிறைவேயுன் சரணஞ் சரணங்

குணகட லமிழ்தேயுன் சரணஞ் சரணஞ்

செறிதரு பவநாசா சரணஞ் சரணஞ்

செயசெய குரவாவுன் சரணஞ் சரணம்


8.விரகரு ளிரியாயுன் சரணஞ் சரண

மிகுமொளி விமலாவுன் சரணஞ் சரண

மானரி யயனேயுன் சரணஞ் சரண

மகமித மறுசோதீ சரணஞ் சரணம்

பரவுற வினியாயுன் சரணஞ் சரணம்

பழுதறு முணர்வேயுன் சரணஞ் சரணஞ்

சிரமுறு தவமேயுன் சரணஞ் சரணஞ்

செயசெய குரவாவுன் சரணஞ் சரணம்


9.செருவது மிகவேகொண் டலையுஞ் சமயஞ்

செறிவற வழகாருங் கழறந் துளமே

மருவியென் மதியாயென் மதியன் றியிலே

மலர் தரு சுரூபாவுன் சரணஞ் சரண

முருவுட னருவாயொன் றதுவன் றியிலே

யுரையுட னுணர்வாய்நின் றவையொன் றறவே

தெரிதரு தெளிவாமுன் சரணஞ் சரணஞ்

செயசெய குரவாவுன் சரணஞ் சரணம்


10.சடவுடல் வடிவாய்நின் றுழல்வேன் றனையுந்

தரவொரு பொருளாவிங் ககிலந் தனிலே

மிடைதரு மிமையோரங் கலம்வந் திடவே

விரைவொடு வருவாயுன் சரணஞ் சரணந்

தடையற வடியார்தந் திரள்சென் றவர்முன்

றழன்முக மெழுகாநின் றுருகும் படியென்

றிடவுள நெகவேதந் தருளுன் சரணஞ்

செயசெய குரவாவுன் சரணஞ் சரணம்