தத்துவ ஞான மார்க்கம்
🙏 அடைக்கலம்
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
கலி விருத்தம்
1.தந்தை தாய்மனை வீடெனுந் தன்மையிற்
சிந்தை யானது சென்றழி யாவகை
யெந்தை யேகுறிக் கொண்டெனை யேன்று கொ
ளந்த மாதியி லாயுன் னடைக்கலம்
2.மேன்மை கல்வி விழுப்பம் வியப்பினிற்
றானெ னுள்ளஞ் சலித்து விழாவகை
ஞான நாயக னேகுறிக் கொள்ளெனை
யானை யாவறி யேனுன் னடைக்கலம்
3.காம லோபங் கதமத மாதியிற்
போம தாமுளம் போய திடாவகை
யேம நானறி யேன் குறிக் கொள்ளெனைச்
சேம மேதெளி வாயுன் னடைக்கலம்
4.வஞ்ச மேமகிழ் வேமடி மானமா
நஞ்ச மேயுள நண்ணியி டாவகை
யெஞ்ச லில்லறி வேகுறிக் கொள்ளெனை
யஞ்சி னேனடி யேனுன் னடைக்கலம்
5.சமய வாதங்கள் சாற்றுபே தக்கலைச்
சுமையி லேயுளந் தான்று வளாவகை
யமைவி லேனையஞ் சேலென் றருளிடு
விமைய வாவிறை வாவுன் னடைக்கலம்
6.விரத மோடு தவம் பல வெந்நெறிப்
புரைத னூடுளம் போய்ப்புலம் பாவகை
வரத னேகுறிக் கொள்ளுள மாக்கனி
யிரத னேயிறை வாவுன் னடைக்கலம்
7.சீத மோடழ றீமை நலங்குல
மேத மொன்றற வேயுள மொத்திட
நாத னேகுறிக் கொண்டு நடத்தெனை
யாத னேனறி யேனுன் னடைக்கலம்
8.பஞ்ச மோடு மழையடை பூசனோய்
நெஞ்சி னாரை நிலைகுலைக் கத்தகு
நெஞ்ச தொன்றி னிலைதள ராவகை
யஞ்ச லென்றரு ளாயுன் னடைக்கலம்
9.மிஞ்சி யேமிடை செய்விகற் பங்களா
னெஞ்சொர் போதொரு வர்க்குநி லாமைகண்
டஞ்சி வந்துன் னடைக்கலம் பூண்டவென்
னெஞ்சு மேவி யிருந்தரு ணின்மலா
10.தாக மேபசி யேதணி யாதிடுஞ்
சோக மோகத் துளந்துவ ளாவகை
யேக நல்லறி வேகுறிக் கொள்ளெனை
யாக னேயடி யேனுன் னடைக்கலம்