தத்துவ ஞான மார்க்கம்
🙏 அபய வரதம்
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
கலிவிருத்தம்
1.அத்த னேயறி வானந்த நாடனே
சுத்த னேசுரூ பானந்தச் சோதியே
நித்த னேயப யந்நிகழ்ந் திட்டிடச்
சித்த னேதிரு வுள்ளத் தடைத்திட
2.அமல மாகிய வானந்த நாடனே
முமல மாமிருள் போக்கிய மூலமே
விமல மாமப யம்விளங் கிட்டிட
வமல னேதிரு வுள்ளத் தடைத்திடே
3.அருள னேநிக ழானந்த நாடனே
பொருள லேனையு மாளுடைப் புண்ணியா
தெருள னேயப யந்திகழ்ந் திட்டிட
வருள னேதிரு வுள்ளத் தடைத்திடே
4.ஆசி லாவறி வானந்த நாடனே
மாசி லாமன மன்னுஞ் சுரூபனே
யீச னேயப யம்மிலங் கிட்டிடத்
தேச னேதிரு வுள்ளத் தடைத்திட
5.ஏக னேயெழி லானந்த நாடனே
சோக மேது மிலாருட் சுரூபனே
யாக னேயப யம்மமர்ந் திட்டிட
யோக னேதிரு வுள்ளத் தடைத்திடே
6.நண்ண லேனவி லானந்த நாடனே
யெண்ணி லேனையு மாண்டரு ளீசனே
திண்ண மாரப யந்திகழ்ந் திட்டிட
வண்ண லேதிரு வுள்ளத் தடைத்திடே
7.மாறி லாமகிழ் வானந்த நாடனே
யாறு வாருளத் தண்ணிக்குங் கன்னலே
யீறி லாவப யம்மிலங் கிட்டிடத்
தேற லேதிரு வுள்ளத் தடைத்திடே
8.அருத்த னேயம லானந்த நாடனே
கருத்த னேயெனை யாள்கரு ணாலயா
நிருத்த னேயப யந்திகழ்ந் திட்டிட
வொருத்த னேதிரு வுள்ளத் தடைத்திடே
9.ஐய னேயரு ளானந்த நாடனே
பொய்ய னேனுள மேவும் புனிதனே
மெய்ய னேயப யம்விளங் கிட்டிடச்
செய்ய னேதிரு வுள்ளத் தடைத்திடே
10.நம்ப னேஞான வானந்த நாடனே
வம்ப னேனுள மன்னுஞ் சுரூபனே
யம்பொ னேயப யம்மணைந் திட்டிடச்
செம்பொ னேதிரு வுள்ளத் தடைத்திடே