தத்துவ ஞான மார்க்கம்

அருட்பத்து

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

1.கருணை யாகின்ற கண்ணுடைக் கரும்பே

கன்ன லேநற் கலைக ளளப்பொணாப்

பொருள னேபுலை யேனையும் பொருளாப்

பூமி தன்னில்வந் தாண்டதோர் புனிதா

தெருள னேசிவப்ர காசனே தேனே

திகழு மன்பர்தங் கவலையை நீக்கி

யருள னேயஞ்ச லஞ்சலென் றன்ப

ரின்ப நன்குற வங்கணா வருளே


2.ஓது மாமறை யாயிரங் கோடி

யுணரு மாறற வோங்கொளி யாய

நாத னேநணு காருளத் திருளே

ஞான வாரமிழ் தேநலஞ் சுவையே

சீத வாரருட் சிவப்பிர காசா

திகழு மன்பர்தங் கவலையை நீக்கிப்

போத வின்பமும் போகமும் புகழும்

பொருவி லன்பரைப் பொருந்திட வருளே


3.தேவ தேவனே சிவப்பிர காசா

சிற்சு ரூபநற் செழுஞ்சுடர்த் தேனே

பாவ நாசனே பத்தர்த மெய்ப்பிற்

பழுதி லாதநற் றுணைவனே பரமா

வாவ வென்றன்பர் கவலையை நீக்கி

யளவி லாவின்ப மழகுற வருளா

யோவி லாவரு ளேவடி வாய

வுத்த மாமத்த னேனுளக் கனியே


4.நின்னை யன்றியோர் பொருளிலர் நினையு

நினைவு வேறிலர் நின்னையே திகழும்

பொன்னும் போகமும் புகழொடு வலியும்

பொருந்து மூர்மனை காணியும் புகலு

மன்னை யுஞ்சுற் றமுமற்ற துணையு

மாக வேநினைந் தன்றியொன் றறியா

வன்ன வன்பர்தங் கவலைய தகல

வளவி லின்பநன் கழகுற வருளே


5.தென்ன வன்சேரன் றிகழ்தரு சோழன்

றேச மங்கங்கு திகழ்ந்தர சாளு

மன்னர்நீ யமைச்சர் நாற்படைத் தலைவர்

மற்று நீயவர் மதியுநீ மனநீ

யுன்னை யேதுணை யாகநன் குடைய

வொப்பி லன்பர்தங் கவலையை யொழித்துத்

தென்ன னேசிவப் பிரகாசத் தேனே

திகழு மன்பருக் கின்பநன் கருளே


6.வேத கீதனே விண்ணவர்க் கரசே

மெய்யர் மெய்யனே பொய்யர்தம் பொய்யே

யாத னேனப ராதமே செய்தே

னாயி னுந்நினை யன்றிமற் றறியேன்

சீத னேசிவப் பிரகாசத் தேனே

திகழு மன்பர்தங் கவலையை நீக்கி

நாத னேயின்ப நன்குற வருளாய்

நாயி னேனையு மடிமை கொண்டானே


7.முனிவி லாதபே ரருளுடை முனியே

முத்த னேயொப்பு மிக்கவ ரில்லாத்

தனிய னாகிய சம்புவே தலைவா

தத்து வாபத்தர் வைத்தமா நிதியே

கனியு மாவருட் கற்பகக் கனியே

காத லாலன்பர் கவலையை நீக்கி

யினிதி னின்பமு முவகையு மருளா

யென்னை யாளுடை யெம்பெரு மானே


8.அன்பி லேனுக் கழிவுறு போகத்

தாசை வெள்ளமு மயலுமே யுடையே

னென் பொ லாமணி யேயிவை கண்டு

மிரங்கி யேன்று கொண் டாண்டதுன் னருளே

யின்ப னேசிவப் பிரகாசத் தேனே

யேழை யேன்குற்றங் குணமெனக் கொண்டு

நன்பொ னேயன்பர் கவலை தீர்த் தின்ப

நல்க வேண்டுமெ னற்றவப் பயனே


9.நின்க ழற்குநா னன்பில னாத

னீயு நானுமே யறிவமத் தனைமற்

றுன்க ழற்குநா னடிமையென் பதுநா

னுலகெ லாமறி யும்பொரு ளதனாற்

றுன்ப முற்றிடி னானுனைச் சிரிப்பர்

சுரூப நன்குறிற் றுதிப்பது முனையே

யன்ப தற்பொருட் டும்மரு ளாலு

மன்ப ரின்புறத் துன்பறுத் தருளே


10.திருந டத்தர சேசுரூ பாவென்

றிகழு நல்லருட் சிவப்பிர காசா

வுருவெ டுத்துவிட் டிடைவிடா துழலு

முற்ப வக்கடு வாகிய வொருவா

பருவ துற்றநல் லன்பர்தந் துயரைப்

பாற வேசெய்துன் பழுதிலா வின்ப

மருவி டச்செய்திவ் வுடலுள தனையு

மகிழ வைத்துள மன்னிநீ யருளே