தத்துவ ஞான மார்க்கம்
🙏 காரணற்காணாக் கரணத்திகழ்ச்சி
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
எண்சீர்க்கழி நெடி லடியாசிரியவிருத்தம்
1.தொழுந்தேவர் நின்றயரத் துன்பப் பிறப்பி
லழுந்தே லென வெனைத்தா னாடிப் புறத்தி
லுழுந்தூர் பொழுதி னுரைத்தா னுரைத்த
செழுந்தேற லுண்ணாச் செவியுஞ் செவியே
தேசிகன்சீர் கேளாச் செவியுஞ் செவியே
2.அரும்பி முளையா யலராகிக் காய்த்துக்
குரம்பை பழுத்துதிர்ந்தோர் கொள்கைவா யின்னுந்
திரும்பிப் புகாமே சிவன் கோயில் கொள்ள
விரும்பத் தவமில்லா மெய்யென்ன மெய்யே
மெய்க்கோயி லாகாத மெய்யென்ன மெய்யே
3.ஒளிக்கு மொளியா வொளியுருவங் கொண்டு
வெளிக்க ணெழுந் தருளும் வேதியனைக் கண்டு
துளிக்கு மருவி சொரியச் சொரியக்
களிக்குந் திறமிலாக் கண்ணென்ன கண்ணே
கருணைக் கழல்காணாக் கண்ணென்ன கண்ணே
4.பொற்ற மரையவனாய்ப் புத்தேளி ராயவர்தஞ்
சற்றா மரசாய்ச் சகத்தே பிறந்திறந்து
சுற்றா மரைபோற் சுழலா வகையாண்ட
நற்றா மரைமுரலா நாசியு நாசியே
ஞான மணங்கவரா நாசியு நாசியே
5.உயர்ந்தவா னோரு மொளிமறையும் போற்றப்
பயந்தவா பாராதிப் பார்மிசையே யென்னை
யயர்ந்தவா மூடி யழிவேனை யாள
நயந்தவா பாடாத நாவென்ன நாவே
நற்சுரூபா னந்தனென்னா நாவென்ன நாவே
6.மலரோன் முதலார் மறைகோடி கோடி
கலைதேடி நின்றயரக் கண்காண வந்தென்
றலை தேடித் தந்த தடந்தாளிற் றூவ
வலர்தேடிப் போகா வடியு மடியே
யாலயஞ்சூழ் போகா வடியு மடியே
7.குழலே யனையமொழிக் கோல்வளையார் மாயச்
சுழலே யுழலுமனத் தொல்வினையேன் செல்லு
மழலே யனைய பிறப்பறுத்த வம்பொற்
கழலேவல் செய்யாத கையென்ன கையே
கடிமலர் தூய்த்தொழாக் கையென்ன கையே
8.உவமந் தனக்கி லுபநிடதந் தேடுஞ்
சிவமுந் திருவுருவாய்த் தீயேன தெல்லாப்
பவமுங் கெடவருளும் பங்கயத்தே வீழத்
தவமுன்பு செய்யாத தலையுந் தலையே
தலைவன்றாள் சூடாத தலையுந் தலையே
9.சீர்பாடு மூவர்கள்பாற் றேவர்கள்பாற் செம்மைமிகு
மார்பாடுஞ் சாராத வானந்தன் றான்வந்திங்
கோர்பாடு மில்லே னுளமறிய வுள்புகுந்த
நேர்பாடு தானினையா நெஞ்சென்ன நெஞ்சே
நெக்குநெக் குள்ளுருகா நெஞ்சென்ன நெஞ்சே
10.இம்மை மறுமை யெனப்பகரு மின்னல்சேர்
பொய்மை யுருவாகிப் பொன்றாமைப் போதமாய்
மெய்மையா னந்தம் வெறுமின்ப மாய்விளங்குந்
தம்மைப் பெறுகல்லார் தரமென்ன தரமே
தற்சுரூபனாகாதார் தரமென்ன தரமே