தத்துவ ஞான மார்க்கம்

🙏 சீர்பாதவல்லபம்

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

கலிவிருத்தம்

1.ஆபத் தனமாகு மாபத் துணையாகு

மாபத் தினைவேரோ டரியும் மயிலாகு

மாபத் ததுமேவா வரணம் மதுவாகு

மாபத் தறுசம்பத் தமலன் கழறானே


2.இடருக் கிடராகு மிடரற் றிடமாகு

மிடரைப் பொடிசெய்தற் கெறிநற் படையாகு

மிடருக் கிசைவொண்ணா வெழிலா ரரணாகு

மிடரற் றிடுமின்பத் திறைபொற் கழறானே


3.அழிவுக் கழிவாகு மழிவற் றிடமாகு

மழிவைக் கருவேரோ டரியும் மயிலாகு

மழிவற் றெழிலாரு மன்பர்க் கருண்மிக்குப்

பொழிநற் சுரூபன்றன் புனைபொற் கழறானே


4.துயரைத் துயர்செய்யுந் துயரற்றிட மேவுந்

துயரைத் துகள்செய்யத் தொடுநற் படையாகுந்

துயர்மற் றணுகாநல் லரணத் துணையாகுந்

துயரற் றிடுமின்பச் சுரூபன் கழறானே


5.சோகத் திருளுக்குச் சுடர்பொற் சசியாகுஞ்

சோகத் திரள்சாடத் தொகுதண் டமதாகுஞ்

சோகத் தொடுமோகத் தொடர்வற் றிடமாகு

மேகச் சுரூபன்ற னின்பக் கழறானே


6.கோபத் தழலுக்குக் குளிர்நற் புனலாகுங்

கோபத் திருளுக்குக் குளிர்பொற் சசியாகுங்

கோபப் பகைவெல்லக் கூர்நற் படையாகுஞ்

சார்புற் றவருள்ளத் தலைவன் கழறானே


7.மயலைத் தடிசெய்யு மதமத் தனைசெய்யுங்

கயமுற் றிடுகாமக் களியைப் படவெய்யும்

பயமற் சரமாதிப் படையைக் கெடமோதுஞ்

செயநற் சுரூபன்றன் செம்பொற் கழறானே/p>


8.மறுமைப் பிணிதீர்நன் மதுரக் கடுவாகுஞ்

சிறுமைத் தனமத்தத் திரளைப் பொடிசெய்யு

முறுமைக் குணமிக்கீ டணையைக் கெடமோ துஞ்

செறிநற் சுரூபன்றன் செம்பொற் கழறானே


9.திருவைச் செறிவிக்குந் திகழப் புகழ்விக்கு

முருவைப் பொலிவிக்கு முணர்வைக் கிளர்விக்கும்

பொருவற் றிடுநன்மைப் பொருளைப் புணர்விக்குங்

குருநற் சுரூபன்றன் குளிர்பொற் கழறானே


10.நினைவுற்றன வெல்லா நிகழ்வித்திடு மின்பத்

தனமிக்கிடு ஞானத் தொடுநற்குண சீல

மினமுற்றிட நல்கு மெழினற்சுரூ பன்றன்

புனைபொற்கழ லன்புற் றவருட்பொலி வுற்றே