தத்துவ ஞான மார்க்கம்
🙏 குயில்
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
அறுசீர்க்கழிநெடிலடி யிரட்டை யாசிரிய விருத்தம்
1.மேலைய மரர்க்கு மேலாம் விண்ணவன் மண்ணிலி ழிந்து
மாலையுங் காலையு மில்லா வகையென் றலைமிசை வைத்த
காலை யருணற் கடந்த காலுடை யானையென் கண்ணைச்
சோலையில் வாழுங் குயிலே சுரூபனை நீவரக் கூவாய்
2.அச்சந்த மாலு மயனு மல்லா தவரு மறியா
ரிச் சந்த மென்று மறையு மியம்புவ தொன்றென வென்ற
னுச்சந் தலைமிசை யேதன் னொண்மலர்ப் பாதங்கள் சூட்டி
யச்சந் தவிர்த்தெனை யாண்ட வழகனை நீவரக் கூவாய்
3.முத்திக் கரசென்று தன்னை மூவாத மூவருந்தேட
வெத்திக் கடையேனை யாண்டிங் கீர்த்தெனை யென்பூ டுருக்கிப்
புத்திக்கும் வாக்குக்கு மென்னைம் புலன்களுக்கும் புலமாகித்
தித்திக்கு மின்னமிழ் தத்தைச் சிவப்பிர காசனைக் கூவாய்
4.சாத்திரங் கற்றுப் பிதற்றித் தமையுண ராதவ ரோடே
காத்திர மேவடி வாகிக் கழிந்து விடக்கட வேனைப்
பார்த் திரங் கிப்பழ வேதம் பன்னும் பரமபதத்தை
மாத்திரை யொன்றின் வழங்கும் வள்ளலை நீவரக் கூவாய்
5.ஓதி யுணரப் படாத வொன்றென் றுபநிட மோது
மாதியு மந்தமு மில்லா வானந்த நாடனருளால்
வேதிய வேடம் புனைந்தென் விரகை யழித்த விரகன்
கோதிக் கனி யுண் குயிலே குருபர னைவரக் கூவாய்
6.மரித்தல் பிறத்த லிலாத மாசறு சோதியை நீயென்
றொருத்தலை மாற்றம தாக வுபநிடத் தோதி விடாதே
யிருத்தியீ திப்பரி சென்ன வின்பவெள் ளத்தெனை யிட்ட
நிருத்தனை யாவையு மான நிமலனை நீவரக் கூவாய்
7.காலமு ஞாலமும் விண்ணுங் காலுங் கனலும் புனலுந்
தூலமு நேர்மையு மாகிச் சொல்லும் பொருண் முற்று மல்லான்
கோலங் கொடுவந் தடியேன் குடிமுழு தாண்ட குழகன்
நீலநிறக் குயிற் பிள்ளாய் நிமலனை நீவரக் கூவாய்
8.கந்த மலர்ப்பொழி றோறுங் கனியுண்டு வாழுங் குயிலே
தொந்த வினையற நோக்கித் துணையடி யென்றலை வைத்துச்
சந்தமிதுவென்ன வொண்ணாத் தன்னை யெனக் கருள் செய்த
பந்தமும் வீடு மிலாத பரஞ்சுடரை வரக் கூவாய்
9.சோத்த முனக்குக் குயிலே சுராதிபர் நின்று துவள
வூத்தை யுடம்பள வாகி யூதாரி யாயழி வேற்கு
மோத் தின் முடிவுரைத் தற்கு முன்னவு மொண்ணாத வொன் றை
வார்த்தை யொன்றாலே யளிக்கும் வல்லபனை வரக் கூவாய்
10.பொன்னலர் சோலைக் குயிலே புத்தேளிர் பொன்னடி கூட
வின்னலங் கெய்தவிம் மண்ணி லேழையேன் றன்னுள் புகுந்த
கன்னலைத் தேனை யமிழ்தைக் கனியைப் பிறவிக் கடுவை
யென்னலங் கொண்ட பிரானை யிறை வனை நீவரக் கூவாய்
11.முன்னான் மறையின் முடிவு மொழியு முழுமுத றன்னைத்
தன்னாக வென்னை யுவந்து தாளிணை யென் றலை தந்த
வென்னா யகனை யென்கண்ணை யென்னுயிர்க் கின்னமிழ் தத்தை
பொன்னான வாயாற் குயிலே புண்ணியனை வரக் கூவாய்
12.சுந்தர நீல நிறத்துச் சோலையில் வாழுங் குயிலே
யித்திர சாலம தென்ன யாவையுங் காட்டி மறைப்பா
னந்தர நாடுபுல் லென்ன வவனியின் மானுட னாகி
யெந் தர மாள விசைந்த வின்னமிழ் தை வரக் கூவாய்
13.தன்னுடைச் சோதியிற் றுஞ்சல் பிறப்பற விந்தச் சகத்தே
மின்னிடை யாளொடுங் கூடி வேதிய வேடத் தின் வந்து
பொன்னடி கூட்டியென் னுள்ளே பூரண வானந்த மாக்கி
யென்னிடர் தீர்த்த பிரானை யிளங் குயிலே வரக் கூவாய்