தத்துவ ஞான மார்க்கம்
🙏 அடியவர்திறத்து நிந்தாஸ்துதி
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
1.காயமா ளிகைய துண்டு மூவர்கா தலிக ளுண்டு
வாயல்காப் பறிவுமுண்டு வளம்படு சமத மாதி
யாயநற் சுற்ற முண்டங் கடக்கரும் பொருளு முண்டு
தூயநற் சுரூபா னந்தன் றொண்டர்க டுறந்த தென்னே
2.அன்பர்பா லார்வ முண்டங் கரும்பவச் செற்ற முண்டு
வன்பதார் விஷயந் தன்மேன் மாறிடாக் குரோத முண்டு
முன்புறப் பக்க மேல்கீழ் முழுதுமா நிதியு முண்டு
துன்பமில் சுரூபா னந்தன் றொண்டர்க டுறந்த தென்னே
3.ஒன்றொடுங் கலந்தி ராத வுறவின்மை பெரிது முண்டு
பொன்றினு மசைவு றாத முரண்வலி புகலி லுண்டு
கன் றிடும் வயிரி யோடுங் கலக்கமி லன்புண் டென்றாற்
றுன்றருட் சுரூபா னந்தன் றொண்டர்க டுறந்த தென்னே
4.கல்லுறு சிந்தை யெல்லாங் கரைக்கும்வல் லபமு முண்டு
வல்லவர்க் கொருகா லத்து மிரங்கிடா மறமு முண்டங்
கெல்லையற் றிடுமி ரக்க மிறையொடு மிகவுண் டென்றாற்
றொல்லைநற் சிவப்ர காசன் றொண்டர்க டுறந்த தென்னே
5.முன்பினு மலைவு தீர மொழிதரு விரக துண்டு
நன்கொடு தீங்கு காணா ஞானமாஞ் செருக்கு முண்டு
வன்புறு துன்பம் வந்தான் மயக்கமில் களிப்ப துண்டு
துன்பமில் சுரூபா னந்தன் றொண்டர்க டுறந்த தென்னே
6.கோத்தவை குலைத்து மேலாங் குணமின்மை பெரிது முண்டு
பார்த்தவ ருயிர்கண் ணாலே வாங்கு பண் பின்மை யுண்டங்
கேத்துறு மேழை கட்கே யெளிவரு மியல்புண் டென்றா
லாத்தனன் சுரூபானந்த னன்பர்க டுறந்த தென்னே
7.உலகியல் புறாவு ணர்ந்த வுன்மத்த மிகவு முண்டு
தலைவன தருள தன்றித் தணிப்பரும் பித்து முண்டு
மலைவுறு பகுதி போந்து வாதனை மாண்ட துண்டு
நிலையுடைச் சுரூபா னந்த னேசர்க டுறந்த தென்னே
8.தள்ளினு மிறைவ னன்பர் தமைவிடாப் பாச முண்டு
நள்ளினு மிதரர் தம்மை நணுகிடாத் துவேஷ முண்டு
துள்ளும்வன் னெஞ்ச வஞ்சர்க் கருளிடாச் சோர முண்டாற்
றெள்ளுநற் சுரூபா னந்தன் சித்தர்க டுறந்த தென்னே
9.ஏத்தினர்க் கருத்தே செய்தங் கெளிவரு மிச்சை யுண்டு
தோத்திரச் சூழ லுற்றுச் சுழலும்வன் பற்று முண்டு
சாத்திரப் பேய்க ளுக்குச் சலனஞ் செய் தவறுண் டென்றாற்
றீத்தனற் சுரூபா னந்தன் சித்தர்க டுறந்த தென்னே
10.கரையில்பே ரின்பத் தாராக் காமுகர் விஷயகோப
ருரையறு பொருடம் முள்ளே யொளித்துப்பே ணிடுமு லோபர்
முரிவில்பே ரின்பத் தீசன் வயமுயிர் காணா மோகர்
நிரையுமெம் மதமுந் தாமா நிமலர்க டுறந்த தென்னே
11.வரும்பவத் தாறாச் சீற்ற மாற்சரி யத்தர் தன்னைத்
தருங்குரு பரன்றா ளன்றித் தாழ்ந் திடாத் தெம்பர் தீரா
வரும்பவ நாச னெங்கட் குண்டெலு மகங்கா ரத்தர்
பரம்புமா யாபை சுன்ய பண்பினர் துறந்த தென்னே
12.நிலவருட் பொறையர் நேதி நேதியே நிரூப கத்தாற்
குலவுறு நற்சந் தோஷர் குருபரன் முழுது மென்னச்
சொலிதையுற் றிடும்வி வேகர் தோய்வெதி ரிக்த சாந்தர்
தொலைவில்சித் தவிரோ தத்தர் தூயவர் துறந்த தென்னே
13.உற்றவா ரோபி தங்க ளொழிந்தவா றுதறா மாமான்
முற்றுமாய் மொழியி றந்து முடிந்தமோ னத்த ராமாற்
பற்றுவீ டின்றி நின்ற பராமிழ்தா னந்தர் தாமாற்
றுற்றசீர்ச் சுரூபா னந்தன் றொண்டர்க டுறந்த தென்னே
14சுட்டிய வெவையுந் தாமாய்த் துறக்கவே றொன்றின் றானால்
விட்டதும் விடாது மன்றி வேதமோர் நான்கும் பேணப்
பட்டிடு மளவு மல்லாப் பரம்பரன் சுரூபா னந்தன்
சிட்டர்க டுறந்தா ரென்னும் வார்த்தையுஞ் சிறப்ப தன்றே