தத்துவ ஞான மார்க்கம்
🙏 நெஞ்சிற்கமைவுரை
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
நேரிசை வெண்பா
1.உப்பகன்ற நீர்க்கூழு முண்டாற் பசிகெடுமா
லப்பதுண்டு கூவல்குள மாறதனி - லிப்படியைப்
பார்த்தமையாய் நெஞ்சே பரந்தெழுந்து சென்றாலும்
பேர்த்துளத்தின் மேல்வருமோ பேறு
2.பல்காய நற்கறியும் பானெய்பழத் தோடடிசில்
செல்வாய தேசஞ் செறிந்தாலு - மெல்லவுனை
யூட்டாவூ ழுண்டே லுறுபிணிமற் றியாதொன்றால்
வீட்டாதோ நெஞ்சே விரைந்து
3.நல்ல வறுசுவைதா னாக்கினுனி மாத்திரமே
யெல்லை யிருவிரலே யல்லதிலை - மெல்ல
விருவிரலைத் தான்கடக்க மாட்டாதே நெஞ்சே
பொருகடலைத் தான்கடப்பாய் போய்
4.ஆடை யழகினைநன் காதரித்தே யாங்கதற்கென்
றோடி யுறுபொருளுக் குற்றுழன்றாய் - கூடியதேல்
வண்ணா னெலிமருவார் வைப்பிடமற் றின்னவற்றா
லெண்ணாயோ நெஞ்சே யிடர்
5.கந்தையொடு வெண்ணீறு கன்முழைபாழ்க் கோயில்பல
முந்தையுள சீத முறுமென்னில் - வெந்துயரக்
கோடையினிற் கோவணமுங் கூடமிகை யித்தனைகா
ணாடையினிற் காரியந்தா னாங்கு
6.நீயா யமையாய் நினைந்தோடிக் கிட்டாமை
யேயா வமைந்தா யிடர்நெஞ்சே - சாயோ
கடையானார் காய்பசிக்கே கால்குலைவர் கற்றோ
ரடையாரோ வாங்கமை வின் பால்
7.அமையாதே பெற்றதனா லாங்காங்கு நன்றென்
றிமையா தெழுந்தோடு கின்றாய் - சமையாச்
சிறுமைக்கு வித்ததுவாந் தேறாய் மனனே
மறுமைக்கு மஃதே மறைப்பு
8.ஆற்றங் கரைப்பசுத்தா னக்கரையோ டிக்கரையாய்த்
தோற்றும் பசுப்பைத் தொடர்வுறுமே - யாற்ற
வதுவேபோ னெஞ்சே யலைந்தலைப்பட் டோடு
மிதுவே யுனக்கிதனாற் பேறு
9.இருந்தவிடத் தேதும்வரக் கண்டிருப்ப தன்றோ
பெருந்தகைமைக் காபரணம் பேதாய் - மருந்தெனவே
யாங்கினியார் தங்கடையிற் சென்றிடினு மாதரியார்
பாங்கிதுகாண் பாழ்நெஞ்சே பார்
10.உணர்ந்தார்க் குடம்பு மிகையென் றுலக
முணர்ந்தா ருணர்ந்தே யுரைத்தா - ரிணைந்தாம்
பொருண்முழுதும் விட்டாலும் பொய்யுடம்பிற் காதன்
மருளதுவா நெஞ்சே மறித்து
11.இல்லாத தில்லை யுளதுதவி ராதென்று
நல்லார் துணிபொருளை நாடுங்கா - லெல்லா
மமைந்தபடி யேவருமா லாங்கசைவெ னெஞ்சே
சமைந்தபொரு டாமறிவார் தாம்
12.இங்கேதன் னூனுயிரை யேதமறக் கண்ட விடத்
தங்கே யெலாமமைய லாயிருக்க - வெங்கேனுங்
காடு மலையுங் கடந்துடம்புக் காய்வருந்தி
யோடுவதெ னெஞ்சே யுரை
13.அமைதற் குபாய மறிந்திடநீ வேண்டிற்
கமையுற்ற ஞானக் கரும்பைத் - தமையுற்ற
வாரியர்பாற் பெற்றங் கவரடிக்கே யேவலினை
யோரியல்பாற் செய்நெஞ்சே யுற்று
14.நீடுந் தலைகீழ்கான் மேலாகி நின்றாலுங்
கூடும்படி யொழியக் கூடாதா - லோடி
வருந்தாம லுள்ளபடி வந்திடக்கண் டாறி
யிருந்தாலோ நெஞ்சே யினிது
15.நல்லோரை மேவி நலங்கிடக்க வங்குள்ள
பொல்லாங்கு கொண்டாடிப் போகாதே - யெல்லா
மருளியவா செய்தங் கலதொழிநீ நெஞ்சே
பொருளியல்வே றில்லையினிப் போற்று
16.வைதலும் வாழ்த்துதலும் வார்த்தையினிற் கற்பித்து
நையுமது நெஞ்சே நலமன்றா - மெய்தும்
புரையிடத்து வாயுப் புரைக்குமொலி யென்றே
யுரையிடத்துக் கோளொழி நீ யுற்று
17.ஒன்பதுவா யாலு மலஞ்சொரிய வூத்தைகமழ்
புன்புலையாங் குற்றப் புலாலுடம்பை - யன்புடனே
யேத்துவார் வைவா ரிழிவுரைப்பா ரல்லாதா
ராத்தமா மெய்யுணர்வார்க் காங்கு
18.வாயுவன னீர்பிணிதான் மற்றும் பலபலவா
வாயசட வேதுவினா லாம்பயனுக் - கேயவொரு
செற்றநலங் கொண்டிலையேற் சேதனவே துத்தனையு
மற்றவண நெஞ்சே மதி
19.ஆர்வமொடு செற்றத்தை யாரிடத்துங் கொள்ளாதே
சாரமுள தெவ்விடத்துந் தான்கொண்டு - தீரவுணர்
நல்லோர்தஞ் சொல்லை நழுவாமை நீகொண்டு
நில்லா யிதுவே நெறி
20.பெற்றதுவே கொண்டமைந்து பேரிழவிற் கொல்காதே
குற்றநல மென்கோள் குறுகாதே - மற்றும்
பயனின் மொழியாதே பார்த்துளமே நல்லோர்
நயமுமற வாதே நட
21.பொய்க்கனவும் பேய்த்தேரும் போலுமுடல் போமளவுஞ்
சிக்கெனவே நாதன் றிருவடியை - நெக்குருகிப்
பூண்டுவிடா தேகிடந்து போற்றியிடு நெஞ்சேநீ
மீண்டுபிற வாதே விட
22.ஆண்ட வியல்பை நினைந்து நினைந்துருகி
வேண்டிமிக மெய்யன்பை மேன்மேலு - மாண்ட
வடியிணையே பூண்டமைவா மாரமிழ்தை நெஞ்சே
யொடிவறவே நீயுண் டிரு