தத்துவ ஞான மார்க்கம்
🙏 மநோரதம்
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
அடியிரண்டாய்த் தம்மிலொத்துவந்த குறள்வெண் செந்துறை
1.முகுந்தனு நாலு முகனுந்தேட மூல மொருகுரு மூர்த்தியாகிப்
புகுந்தடி யார்தொழ வீற்றிருக்கும் பூங்கோயி லாக நான் பெற்றிலேனே
2.மறைகணா லென்று மறிவரிய மலரடி கண்டுநான் வாழும்வண்ண
மிறைவனார் தன்றிருக் கோயிறன்னி லேதேனு மொன்றாகப் பெற்றிலேனே
3.பாசங்கள் வேரைப் பறிக்கும் வண்ணம் பலிக் கென்று பேரிட்டுப் பையப்பையத்
தேசிக னார்தா மெழுந்தருளுந் திருவீதி யாகநான் பெற்றிலேனே
4.உள்ளூறு நோய்கண மொன்றின் மாற்று மொப் பிலானந்தரை யுள்ளுதோறு
மள்ளூறு சிந்தையார் கண் சொரியு மானந்தக் கண்ணீர்நா னாக்கிலேனே
5.பாமாலை கொண்டு தனையருளப் பாவியேன் கண் காணப் பாரில்வந்த
சீமான் புகழ்கேட்க வாக மெங் குஞ் செலியாய்த் திகழ்ந்திடப் பெற்றிலேனே
6.அச்சந் தவிர்த்தென்னை யாண்டு கொண்ட வருளை நினைதொறு மன்புகூர
வுச்சி தொடங்கி யடியளவு முள மா யிருக்க நான் பெற்றிலேனே
7.கருவேலை யுள்விழுந் தாழுமென்னைக் கண்டஞ்ச லென்றுவந் தாண்டுகொண்ட
வருண்மேனி காணவ நந்தகோடி யாகத்திற் கண்ணாகப் பெற்றிலேனே
8.அவமே பிறந்திறந் தாழுமென்னை யாழாம லஞ்ச லென் றாண்டுகொண்ட
தவராச னைப்பா டிடமயிர்க்கா றானெல்லாம் வாயாகப் பெற்றிலேனே
9.போதந் திரண்டருண் மேனியாகிப் புலையேனை யாளப் புவியில்வந்த
பாத மணமுண்டு வாழநாசி பதினா யிரங்கோடி பெற்றிலேனே
10.கழலிணை யாவருங் காணவந்த காரணனார் தாமெ ழுந் தருளும்
பழவடி யார்திரு வாசறோறும் படியாய்க் கிடக்கநான் பெற்றிலேனே