திருநாம சங்கீர்த்தனம் - எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
1. திருமாலுஞ் சேவின்மிசைத் திகழ்வானும் பூவின் மிசைச்
செறிவானுஞ் சீர்பெருகு மறைநாலுந் தேடிவின
மருமாலங் காயயர வடியேனொன் றாகவென
தகமேநின் றாரமிழ்த் மிகமேவும் பாதநம
வெரிமாகங் காலொடுயிர் தரைநீரென் றூழ்மதியெ
னிருநாலங் காகியவை யலவாகுங் கோலநம்
துரிசாமென் றீயவினை யறநாளுங் கூரவருள்
சுரூபானந் தாயநம சுரூபானந் தாயநம
2. பலவாயொன் றாகிநிகழ் பரமானந் தாயநம
பரவாநின் றார்கள்பரு கமிழ்தாகும் பாதநம
மலவாகந் தீரவென தலைமேவும் பாதநம
வலிதரநெஞ் சூடுருக வருவாயுன் பாதநம
வுலவாவன் பாலுருகி யுடையாயென் றோலமிட
வுரியார்கண்காணவரு மொளியாருங் கோலமொரு
சொலவாலென் பாலருள விசைவாயுன் பாதநம
சுரூபானந் தாயநம சுரூபானந் தாயநம
3. மதியாதுன் பாதமலர் மருவாவென் பாவிமன
மருவாநின் றாரமிழ்தம் வளராநின் றாய்பெருக
விதியாதென் றோதவினி யினியாய்நின் காருணிய
வியல்போவென்றோதிலல திறைவா வெஞ்சாதமுழு
நிதியாயன் பாயெனது ணிறைவாயன் போடுபக
னிசிதானெஞ் சானதுக வுருகாநின் றேகழல்க
டுதியாநின் றாரொழிய வறியாய்நின் பாதநம
சுரூபானந் தாயநம சுரூபானந் தாயநம
4. கனியேயென் கோபெரிய களியேயென் கோகடலு
ளமிழ்தேயென் கோவரிய கதியேயென் கோவினிய
தனியேயென் கோவடியா சரணேயென் கோவெனது
தவமேயென் கோவெனது தலைவாவென் கோமுனிவர்
முனியேயென் கோவென்முழு முதலேயென் கோகருணை
முகிலேயென் கோவிறைவமுறை யோவென் கோவெனது
துனியேகும் பார்வையருள் சுகமேயென் கோவருள்செய்,
சுரூபானந் தாயநம சுரூபானந் தாயநம
5. உலகாய்நின் றாய்விரவி யுயிராய்நின் றாயலகி
லுணர் வாய்நின் றாயடைய வுடையாயென் றாலொளிசெய்
திலகாருன் கோலமல தெதுதானுண் டாய்நிகழ்வ
திதுதானன் றாகுமென வெதுவேறுண் டாமிறைவ
கலகாய்நின் றாலு மிது கலகாநின் சீரலது,
கதிவேறுண் டாகமதி கருதாசென் றூயமுடி
துலகாநின் றாளலது சுமவாதன் பாகிவிளை,
சுரூபானந் தாயநம சுரூபானந் தாயகநம.
6. குறையாதொன் றாலுமற நிறைவாகும் பாதநம
குறியாநின் சோதிதரு குரவாநின் பாதநம
சிறையா வென் றீமனமு ளுறைவாய்நின் பாதநம
சினமார்வந்தீர வருள் தெளிவாகும் பாதநம
மறையாலங் கோர்முனிவர் கணமாகஞ் சேரமரர்
மதியா லுன் றாளில்வழி படுமாநின் றாயுமறு
துறையாலுஞ் சார்வரிய சுடரேநின் பாதநம
சுரூபானந் தாயநம சுரூபானந் தாயநம
7. வழுவாவன் பாலினிய மனனால்வந் தார்மதுர
மொழியானன்றானமது மலராலுன்றாள்கடொழு
தெழுவாரிங் காதரவொ டிறைவாவென் றோலமிட
வெழிலாருந் தீமெழுக தெனவேநின் றாவலுட
னழுவாரிந் த்ராதியர னயன்மாலங் காகவருள்
வலியாருங் காணும்வகை யடியேனுன் றாளிணைக
டொழுமாவந் தாளுமென துணையாகும் பாதநம
சுரூபானந் தாயநம சுரூபானந் தாயநம
8. அழலாலுண் டாயகட லதுவாகுந் தீயபவ
மதிலேநின் றாழுமெனை யருளாலன் போடரிய
கழலாகுஞ் சீர்பெரிய கரையேவந் தேறவருள்
கனியேநின் கோலமல ரடியேகண் காணவரு
ளெழிலாருஞ் சீரடிய ரடியாலங் கேவுதொழி
லினிதாமன் போடுமென சிரமேகொண்டாருமிது
தொழிலாநெஞ் சோடுநின தடியேனுங் கூடவருள்
சுரூபானந் தாயநம சுரூபானந் தாயநம
9. உரையாடுந் தோறுமென துளமானந் திரதிசய
மொழி யா தன்பாயுருகி விழியாறங் கோடிகிகு
திரையாய்வந் தாலுமென செயலாலன் றீதொர்செயல்
சிறியேனொன் றாலுமிது தெரியேனந்தோ வருள்செய்
புரையாதொன் றாலுமறு புலையனெஞ் சாரும்வகை
புகுதாவெஞ் சாம லுழல் புலமாகுந் தீயமிகு
துரையாவுந் தீரவெழு சுடரா கும் பாதநம
சுரூபானந் தாயநம சுரூபானந் தாயநம
10. அறவாநின் பாதநம வறிவாநின் பாதநம
வமலாநின் பாதநம வருளேநின் பாதநம
திறவாநின் பாதநம செறிவேநின் பாதநம
சிவமேநின் பாதநம தெளிவேநின் பாதநம
வுறவாநின் பாதநம வுயிரேநின் பாதநம
வுணர்வேநின் பரதநம வொளியேநின் பாதநம
துறவாநின் பாதநம சுகமேநின் பாதநம
சுரூபானந் தாயநம சுரூபானந் தாயநம
// --- முடிவுற்றது --- //