🙏 திருவடிமாலை

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது


திருவடிமாலை - கலிவெண்பா 

1. செழுந்தரணி தன்னிற் றிருவுருக்கொண் டென்னை
யுழுந்துருளும் போழ்தி னுணர்த்த - வெழுந்தருளி

2. வந்தவடி நாயேன் மனத்தால் வணங்கமதி 
தந்தவடி யாளச் சமைந்தவடி -யந்தரத்து

3. வில்லும் வியன்கனவும் வெண்டேரு நீர்க்குமிழும் 
புல்லு மதிலெழுத்தும் போலவே - சொல்லளவாய்ப்

4. பொன்று முடற்குள்ள பொல்லாங் கெலாநினைந்து 
நின்று நடுங்கிமிக நெஞ்சழிந்தே - னென்றுணையே
 
5. கோற்றேனே மாயைக் குரம்பைக்கூத் தாட்டவினி 
யாற்றேனே யென்ன வளித்தவடி- யாற்றகிலாத்
 
6. தொண்டனையா ளென்று தொழுது பழவடியார் 
தெண்டனோடு விண்ணப்பஞ் செய்யுமடி -கண்டருளித்
 
7. தஞ்சமொன்று மில்லாத் தமியேனைத் தன்னருளா 
லஞ்சலஞ்ச லென்ற வமலனடி - மஞ்சனஞ்செய்
 
8. நீத்தங்கொண் டென்னை யடியவர்த நேயத்தாற் 
றீர்த்தமாட் டிக்கொண்ட செம்பொனடி - யாத்தமா

9. யச்ச மறநம் மடியானென் றாரமிர்த 
மிச்சி றரவிசைந்த வீரனடி - விச்சையாற்
 
10. கட்டப் பிறவிக் கருவைக் கணமொன்றில்
வெட்டக் கழலிட்ட வீரனடி - கெட்டேனென்

11. றாலம் பனமி லடியேன் மனமுருகக் 
கோலம் புனைந்த குரவனடி - சீலமிகும்

12. பாங்காய நல்ல பழவடியார் தற்சூழப் 
பூங்கோயி லுள்ளே புகுந்தவடி - யோங்கு

13. மிருவர்தே டுற்றவடி யிப்படிகண் காண 
வருவதே யென்று மன்நெக் - கருவியாய்ப்

14. பாயாத கண்ணென்ன கண்ணென்று பத்தர்கணம் 
வாயார நின்று வழுத்துமடி - காயமுட
 
15. னண்ணு முயிரும் பொருளு நயந்துதத்தம் 
பண்ணுவித்துக்கொண்ட பரமனடி-தண்ணியவென்

16. சென்னிமிசை வைத்தவடி சித்தந் திரித்தவடி
முன்னையறி வெல்லா முடித்தவடி - யென்னுருவு
 
17. காட்டுமடி கண்ட பொருளெல்லா மென்கண்ணில்
வாட்டி யெனையே மலர்த்துமடி - கோட்டமற
 
18. நம்பத மல்லவிது நான்மறைமா வாக்கியத்திற் 
றொம்பதங்கா ணென்ற சுரூபனடி - யம்பரமாய்

19. நின்ற பரவுடலி னேராக வேயென்னை 
யின்றி யிடவே யிருத்துமடி - யின்றெனலு
 
20. மீண்ட விடத்தே விளம்பு மிதுவொழிய 
மாண்ட விடத்தில்லையென வைத்தவடி- காண்டலிலா
 
21. வல்லை யறிந்தவறி வெங்கேகா ணென்றருளான் 
மெல்ல விளம்பி விழிப் பித்தவடி - தொல்லைமறைத்

22. தற்பதத்தின்மெய்ப்பொருளாந் தற்பரமாயிச்சகத்தி 
னுற்பவத்தை யெல்லா மொழித்தவடி- கற்பிதமாம்
 
23. பூட்சி யிரண்டும்போய்ப் போதமாய்ப் போகுதலு 
மீட்சியு மின்றி விளங்குமடி - காட்சியுங்

24. கண்ணாகக் காணுங்கண் டந்தவடி கண்ணென்று 
மெண்ணாத வண்ண மிருத்துமடி - வண்ணந்தான்

25. மாமறைக ளோதரிய வாசாம கோசரத்தை 
யூமை மொழியா லுணர்த்துமடி - யேமமுற

26. வாங்கி முழுது மலர்த்தாளி லென்னைமகிழ்
தூங்க வளித்த சுரூபனடி - யீங்கமிர்த
 
27. மூறி யகநிறைந்து தித்தித் துடன்மயிர்க்கா
றோறுந்தேக் கிட்டுச் சுடருமடி - தேறித்

28. தெவிட்டாது நின்றவடி தீப்பிறப்பு மாள
வுவட்டாதென் னுள்ளே யுதித்துப் - பவத்தில்வரு

29. மூனை நடங் கண்டவா றொப்பவே மீட்டென்னை
ஞானநடங் கண்டு நயந்தவடி - யூனில்வரு

30. மச்சந் தவிர்த்தவடி யங்கைக் கனியாகி
நிச்சங்க மாகி நிகழ்ந்தவடி - பிச்சரைப்போற்

31. கத்தாமல் வைத்தவடி கண்ணாகி நின்றவடி
வித்தார மெல்லாம் விளைத்தவடி - சித்தத்தி

32. லெண்ணேது மாய்த்தவடி யென்னைவாழ் வித்தவடி 
கண்ணேகண் ணாகக் கரைத்தவடி - யெண்ணுற்ற

33. காலங் கடந்தவடி காமங் கடிந்தவடி
சீலங் குடிகொண்ட செம்பொனடி - ஞாலமெலா

34. முன்பிழைக்க வல்லவடி முற்றுந் துடைக்குமடி
யென்பிழைக்குச் சால விரங்குமடி - யன்பினொடு

35. மூவருந் தேடுமடி மூர்த்தியாய் வந்தவடி
யாவருங் காண விருந்தவடி - பாவியேன்

36. சென்னிகுடி கொண்டவடி சித்தம் புகுந்தவடி 
சொன்னிகழா நின்ற சுரூபனடி - முன்னைவினை
 
37. மாள மிதித்தவடி வல்வினையே னைத்திருத்தி 
யாள மதித்துவந்த வண்ணலடி - நாளுக்கு
 
38. நாளும் புதியவடி நல்லடியா ரோடெனையு
மாளும் படியிசைந்த வையனடி - மாளாவென்
 
39. கள்ளத்தை வாங்குமடி கண்ணாகு மானந்த 
வெள்ளத் தெனைப்புகுத விட்டவடி-யுள்ளத்திற்
 
40. கொண்டகோ ணீக்குமடி கோகனகன் றாழுமடி 
யண்டர்கோனேத்தமிகவஞ்சுமடி-தொண்டரெலாங்
 
41. கொண்டு குலவுமடி கொங்கு கமழுமடி 
பண்டை நிலையிற் பதித்தவடி - கண்டவர்தம்

42. பாவத்தை நீக்குமடி பாகொத் தினியவடி 
யாவத் தனமான வம்பொனடி - வீவற்ற
 
43. வாதி பகவனடி யாதித் தனைமுதலாஞ் 
சோதிக்குஞ் சோதியாந் துய்யவடி - யாதுக்கு

44. மீதாகி நின்றவடி மேல்கீ ழிலாதவடி 
யோதாம லுண்மை யுணர்த்துமடி - பேதாதி
 
45. பேத மறுத்தவடி பேச வினியவடி 
போதக் கனமாம் புனிதவடி - யாதியு

46. மந்தமு மற்றவடி யாரணங்க டேடுமடி 
பந்தமும் வீடும் படைக்குமடி - சிந்தைக்கு

47. மப்பாலாய் நின்றவடி யன்பர்க் கணியவடி
யொப்பான செய்யவடி யொப்பிலடி - யிப்பிறவி
 
48. மாற்றுமடி தன்னை வழங்குமடி மாதவர்கள் 
போற்றுமடி யின்பம் பொழியுமடி - நோற்றிலர்கட்

49. கின்னலாய் நின்றவடியென்னுள்ளத் தின்னமிர்தாய்க் 
கன்னலாய்த் தேனாய்க் கலந்தவடி - தன்னிலைபோய்
 
50. வாராது வந்தவடி வாழ்வறவாழ் வித்தவடி 
யாரா வமிர்தான வம்பொனடி - தீராவென்
 
51. வஞ்ச மறுக்குமடி மானங் கடிந்தவடி 
நெஞ்ச மறிய நிறைந்தவடி - துஞ்சல்பவப்

52. போக்குவர வற்றவடி பொன்னான செய்யவடி 
யாக்க மழிவற்ற வண்ணலடி - யாக்கையுடன்

53. முத்தி யளிக்குமடி மூவா முதல்வனடி 
பத்தி வலையிலகப் பட்டவடி - புத்தியா

54. லுள்ளற் கரியவடி யுண்ணெக் கவருண்ண 
வள்ளத் தமிர்தான வள்ளலடி - தெள்ளுற்ற

55. வின்சொன் மதிப்புலவோ ரேத்தப் பெறாவடியென் 
புன்சொ லுவந்த புனிதனடி - யென்சென்னி
 
56. செய்த தவமான செம்பொனடி தீவினையேன் 
கைதவங் காணாக் கருணையடி - பைதலென

57. வாவாவென் றென்னை யருட்கண்ணாற் பார்த்தருளி 
வாவாவென் றென்றலையில் வைத்தவடி - நாவார

58. வாழ்த்த மனநினைய மாமலர் தூஉய்க்கரங்கள் 
சூழ்த்தச் செவிக டுதிகேட்பத் - தாழ்த்தத்

59. தலைதந்த வள்ளலடி தாமரையோ னுண்மை
நிலையும்பர் காண நிகழ்த்த - வலதின்றி

60. யற்ற பொருளிதுவே யாரணத்தி லாணையே
மற்றில தென்று மழுவேந்த - முற்றுலகிற்

61. றக்கவர் நால்வரே தத்துவ ஞானத்திற் 
பக்குவ ரென்று பகரவான் - சக்கிரக்கை

62. யாண்டகை தன்பா லறியானா வாழித்தேர்ப் 
பாண்டவனுக் கோதப் பதிணெண்கா - லீண்டுலகிற்

63. கையின் மணியென்ன யாவர்க்குங் கண்ணளிக்குஞ்
செய்யசுரூ பானந்தன் செம்பொனடி - மையலாய்க் 

64. கன்று மறுசமயக் கத்திற் கலையாம
லொன்று மொழிவற் றுளவெல்லா - நின்ற
 
65. படியே சிவமாக்கிப் பார்த்தென்னை யாண்ட 
வடியென்னை யாண்ட வடி.

நேரிசை வெண்பா

வடிவிலா மாயையால் வந்த பவத்திற்கு 
முடிவிலா முத்திப் பொருட்கு - மடியோரி
னீண்ட பெருமா னிகளமறப் போதமளித்
தாண்ட பெருமானடி.


// --- முடிவுற்றது --- //