திருவருட்கழன் மாலை - கலிவெண்பா
1. திருவார் செழுங்கமலச் சீராரும் பொற்றா
ளருமா முனிவ ரமரர் - பெருமால்கொண்
2. டின்னஞ் சுவடொற்றிக் காணாதங் கேதமுற
முன்னை யொருமூவர் தரமுயலப் - பின்னவியற்
3. பாதகமே செய்துழலும் பாவியே னைப்பொருளா
நாதனுடல் சாத்தி நலந்திகழப் - பேதையேன்
4. றன்னைவலிந் தாண்டருளித் தாவாத வென்பவத்தை
முன்னமுறு மூலமல மாமாயை - தன்னினொடுஞ்
5. சேரத் துணித்துச் சிறியேனைத் தானாக்கச்
சீருற்ற கோவத்தைச் சீர்ப்பதியில் - வீரைப்
6. பெருமான் சிவப்பிரகா சப்பெருமான் பேரா
வருண்மா மகடுறவி யாயுந் - திருமா
7. மகள்வீறு சாந்தியொடு வாழ்கருணை யன்பாந்
துகடீர் தயைமாதர் சூழ- மிகுஞானச்
8. சித்தர்கணஞ் சேவிப்பச் சீராரு நல்லன்பர்
பத்தியுட னின்று பரவியிட - வெத்திசையு
9. மாரணங்க ளாகமங்க ளாத்தர்மொழி யென்கின்ற
பாரணங்களெங்கும் பரந்தொலிப்பக்-காரணந்தான்
10. யோகாந்த ஞான வுயர்முத்தி மண்டபத்தி
லேகாந்த பீடத் தினிதிருந்து - சோகாந்த
11. வெங் கோலகால மிகப்பெருத்த வெவ்வினையாம்
பொங்கார் மயனெறியிற் போய்நரகி - லங்கே
12. தலைகீழா வீழ்வேனைத் தன்னருளா கின்ற
வலியாலே தானெடுத்து வன்பாய் - நிலையதுற
13. நெஞ்சத் தினைவணக்கி நீள்வஞ்சப் பற்றெல்லாந்
துஞ்சத் துக்ளாகப் பார்த்தருளி - நஞ்சதுறு
14. மென்கோண் முழுது மெழிற்கணாற் றான்விழுங்கி
நன்கேது மில்லாதே னாய்த்தலையி - லன்போடும்
15. வைத்தவடி வாசாம கோசரமென் றாரணங்கள்
பித்துறுபேரன்பாய்ப் பிதற்றுமடி - யெத்தவருந்
16. தேடுமடி தேட்டமெலாந் தீர்க்குமடி திண்ணன்பிற்
கூடுமடி. கூடற் கரியவடி - பாடியிடும்
17. பத்தர்க்கு நல்லவடி பாதகனே னைப்பிடித்து
முத்திப்போ கத்தின் முழுத்துமடி - சித்தத்தை
18. யாற வளித்தவடி யாசை யறுக்குமடி
யூறு முளத்தை யொருக்குமடி - வேற்தற
19. தன்னை யளிக்குமடி சால வினியவடி
யென்னை யுருக்கியின் பித்தவடி - முன்னையொரு
20. மூவர்க்கு மூலவடி மூவாது சாவாது
தேவிற் பொலிந்து திகழ்ந்தவடி - தாவற்ற
21. சுத்தசுக போதவடி சொல்லிற் படாதவடி
பெத்தமொடு முத்தியிற்பே ரின்பவடி-யெத்தியெனை
22. யாரவென வந்தவடி யாயேனை யாண்டருளும்
பேரருளாற் றான்பெரும்பித் தானவடி - சீரருளா
23. லெல்லை யிறந்தவடி யென்றுமுள தாயவடி
சொல்லுமனஞ் செல்லரிய தூயவடி-தொல்லைவினை
24. போகத் துரந்தவடி பூரணம தாயவடி
மாகத் தவருண் மறைந்தவடி - யோகத்தின்
25. மெய்த்துமுடி வாயவடி மெய்யன்பி லார்க்கென்றும்
பொய்த்தவடி பூமராய் நின்றவடி - நித்தலுமென்
26. பேராத பேரவலங் கண்டும் பிசகலறச்
சீரார் திருக்கருணை செய்யுமடி - யோராதே
27. யென்றுமப ராதமே செய்திடினுந் தான்முனிவை
யொன்று மறியாத வொப்பிலடி - கன்றுமனப்
28. புல்லினத்தேநான்மறந்தும் போகாமைத் தன்னன்பர்
நல்லினத்தை யேகூட நல்குமடி - யல்லலுறுஞ்
29. சாதி குலச்சடலைச் சங்கற்ப நான்சாடப்
போத மளித்த புனிதவடி - மேதக்க
30. வெட்டாமி யோகங் களும்பயனுங் கோதெனநான்
விட்டே விளையாட வைத்தவடி - துட்டாய
31. வென்கொடுமைநெஞ்சத் திருந்தகலா தேயருள்செய்
நன்கதனான் மிக்கு நயந்தவடி - தன்கருணை
32. காட்டவெனை யாண்டவடி காயமதாய் மாளுமெனை
மீட்டவடி யுள்ளே விழித்தவடி-பாட்டினொடு
33. பண்ணாகி நின்றவடி பாவனைதீர்த் தாருள்ளக்
கண்ணாய் மணியாய்க் கலந்தவடி - யெண்ணுதற்கு
34. நான்மறைகள் கூசுமடி நன்கறியே னேத்தியிடு
மூனவுரை கேட்க வுவந்தவடி - மோனமதாற்
35. றன்முடிவு கூறுமடி தன்பெருமை பாராதே
யென்னை யிங்ஙனாள விசைந்தவடி - பன்னுமறை
36.மூலமென வோதுமடி மூடனே னென்புருக்குஞ்
சீலமதாய் நின்று திகழ்ந்தவடி - காலமவை
37. கண்டவடி காலங் கடந்தவடி யென்னுயிரை
யுண்டவடி யுள்ளொளியாய் நின்றவடி-மண்டுபவக்
38. காடு சிதைத்தவடி கண்ணாகு மானந்த
நாடுதனை யெனக்கு நல்குமடி - கேடனே
39. னன்பதறுந் தீங்கொழிய வள்ளூறு முள்ளந்தந்
தின்பமுறவென்னையிங்ஙன்வைத்தவடி-முன்பின்றே
40. வேதித் திலகுமடி மெய்யரனு பூதியினாற்
சாதித்துக் காட்டியிடுஞ் சம்புவடி - பேதிக்கு
41. மெப்பொருளு மாயவடி யாவுங் கழன்றவடி
முப்பதமு மோதி முடிந்தவடி - சிற்பதமாய்
42. நின்றபடி நின்றவடி நேரேயென் கண்குளிர
வொன்றுமடி யோருவமை யற்றவடி-சென்றடையு
43. மெப்பதமு மாயவடி யேழையர்க்கு நல்லவடி
யொப்புவமை தான்றனக்கா யுள்ளவடி-யெப்பழைய
44. கோளும் விரகெவையுங் கொண்டவடி கூழையனை
யாளு முவந்தடிமை கொண்டவடி - நாளுமுறு
45. நண்புசெறு மென்றனையு நாணிவிடா தேபிடித்துப்
புண்செயுமென் புன்மையெலாம் போக்குமடி-கண்டு
46. கூர வினியவடி கூற வரியவடி
பார்வையற மெய்யே பணைத்தவடி யூரொடுபே
47. ரின்றி யிலகுமடி யேகரந்த மாயவடி
நன்றினொடு தீங்கதிலா ஞானவடி - வென்றிமிகுந்
48. தூய துறவினர்பாற் றுன்னுமடி தூவிஷய
மாயமுறி லங்கே மறையுமடி - காயமது
49. பேணியிடும் பெற்றியரைப் பேயாக்க வல்லவடி
காணுமலைமுற்றுங்கண் ணாக்குமடி - நாணமெலாந்
50. தீர்த்தவடிசெத்தினிப்போய் நான்பிறவாவண்ணமெ
பார்த்தவடி பரதாதி கேசமுறச் - சீர்த்த
51. வருளே பொழியுமடி யாய்வொன்று மில்லா
மருளேனை மாயாமைக் காத்துத் - தெருளாவென்
52. சித்தஞ் சிவமாக்கிச் செய்தவெலா மெய்த்தவமா
வைத்தெனைவாழ்வித்துவந்த வள்ளலடி-யெத்திறமு
53. நானாக நல்குமடி ஞாலமெலா மானவடி
வானாடர் காண வருந்துமடி -யூனோ
54. டுயிருடைமையானவெலாங் கொண்டவடியோரேன்
மயலறவென் சென்னிதனின் மன்னி - நயமதுறச்
55. சென்ற நனவைத் திரித்துத் திரிந்தவிடத்
தொன்றும் விகார மொழித்த வடி - கன்றுமிருள்
56. காண வளித்தவடி காண்கின்ற வக்கரியாய்ப்
பேணுமிரு டன்னைப் பிரித்தவடி - மாணுணர்வு
57. தானாகி நின்றவடி தன்னிற் பகுதியினை
யானா தழித்தழியா தானவடி - தானா
58. டறிவெங்கு மாயுள்ளா யெல்லா மறிந்து
பிறிவின்றி நின்று பிறங்கிச் - செறிகின்ற
59. தோற்றந் திதியழிவுந் தன்கணே தோன்றியிட்
வூற்றத்துக் கோவா தொளிருமடி-யேற்றத்திற்
60. றானிகழ்ந்த கோளெவையுஞ் சாற்றிப் பரன்மிகுதி
யானெனவே யாவளித்துநின்றவடி-மேனிகழ்ந்த
61. கோளெவையுங்குற்றமெனக் காட்டியக்கோண்மழுக்
நீளும் பரன்கனவாய் நின்றவடி - மாளவெறு
62. முய்த்தவலி காரமதா யோங்குமடி யோதரிதாய்ச்
சுத்தவெதி ரித்தமறத் துன்றுமடி - யத்தி
63. லறிவயர்வங் கின்மையினா லாய்ந்தற்ற வத்தங்
குறியிலிது விங்கெனலாய்க் கூடி - நெறிமையினிற்
64. போந்துணர்வாய் ஞாலத்து வேராய்ப் புகுந்துணுர்வு
தேய்ந்து செருகியிடுஞ் சீரழிவால் - வாய்ந்தபரன்
65. றன் சுழுத்தி யாகுமெனச் சுட்டியது தான்கழன்று
நன்பரமே யாகி நயந்தவடி . முன்புகலு
66. மீரியல்பாய் நின்ற விகுதி பகுதியும்போ
யோரியல்பாய் நின்றங் கொளிருமடி - தீர
67. வுதயாத் தமனமுமற் றோதவத்தை யும்போ
யிதயாத்த மாகி யிலங்கு - மதுபார்த்துத்
68. தீர்ந்து கழன்று தெளிவாய் நிரந்தரமா
யார்ந்த வுணர்வுருவ மானவடி போந்தவித
69. னிற்றிகழும் விச்சுவமே செய்ததுபா ரென்றருள
வித்தனையு நானென் றியம்பியிடு - மித்திகழ்வால்
70. நின்றபடி நேரே யிதம்வே றெனத்தோன்று
மென்றியல் குற்ற மெனக்கேற்கக் - கன்றலறக்
71. காட்டுமடி யிவ்வளவுங் காணு முபாதிகளை
வாட்டிய திங்கினித்தான் மன்னி நிகழ் - சேட்டுணர்வின்
72. மேற்கிடந்த மாசறுத்த லென்றுவெதிரித்தமுந்
தீர்த்திதமுந் தானாய்த் திகழ்ந்தவடி - பார்த்த
73. வனிதமுடன் றானிதமு மற்றொளிரு மம்பொற்
புனிதவடி பூதவுல குண்ட - தனதுசெய்
74. றானு மிறந்தவடி சாற்றவறி தாயவடி
யான வுபசமன மாயவடி - மோனபதந்
75. தம்பிரான் வந்து வெளிப்படுமித் தானமென
நம்புமா காட்டி நயந்தவடி யெம்பரம
76. தின்றி யெழிறிகழு மெல்லையிலாப் பேரொளியாய்
நின்றபடி நின்ற நிமலவடி - யென்றுந்த
77. னோத வுலகி னுலப்பில்சுக சாகரமாய்
நீதியது தானாய் நிகழ்ந்தவடி - யீதெனவே
78. தானிருந்து காட்டத் தயங்குமூ மைக்குடத்தி
னீர்நிறைந்தாற் போனிறைந்து நின்றவடி - தேனி
79. யெற்புத் தொளைதொறுமங் கேறிமயிற் கால்கடொறு
மிக்குத்தித் திக்கும் விமலவடி - தக்க
80. வொருமையா லித்திகழ்வெ லாமொன்று சித்திப்
பெருமைபே ரைப் புலனு மாரக் - கரவதிலா
81. வெள்ளவெளி யாயவடி மேவுமருட் கண்ணதனாற்
கள்ளமற வெவ்வுருவுங் காணுமடி - தொள்ளைச்
82. செவிவழிய தின்றித் திகழொலியாய் நின்ற
நவையிலடி நாடற் கரிதாய்ச் சுவையதுறு
83. நாவினாலன்றி நலமாரத் தித்திக்கு
மோவிலா வின்சுவையா மொப்பிலடி - மேவு
84. முடற்பரிச மின்றி யொழிவறுபே ரின்பத்
திடப்பரிச மாகித் தெரிவுற் - றுடைக்குமிழான்
85. மேவு மணமின்றி விரிவொடுக்க மின்றாகித்
தாவின் மணமாய்த் தயங்குமடி பாவியேன்
86. சென்னிகுடி கொண்ட வடி தீவினையே னெஞ்சதனின்
மன்னி யிருந்தவடி நான்மறந்துந் - தன்னொழிய
87. வுன்ன றவிர்த்தவடி யொன்றாகி நின் றவடி
யன்னையினும் தானெனக்கன் பானவடி - நன்னயமா
88. மன்பர்க் கெளியவடி யன்பதிலா நெஞ்சதுறும்
வன்பர்க்குச் சால வலியவடி - பென்பற்றாம்
89. வஞ்சத்தைச் சாடுமடி வாராது வந்தவடி
கொஞ்சிட் டுபநிடங்கள் கூவுமடி -தஞ்சமதாய்
90. நின்றபடி நின்றவடி நேரேயென் மோகத்தைக்
கொன்றவடி யுண்டிலையென் கோண்முழுது மன்றியு
91. மாற்றமது வாட்டுமடி வாழ்வறவாழ் வித்தவடி
போற்றுமடி யாரைமிகப் போற்றுமடி - யாற்றா
92. தருணினைந்தங் கள்ளூறு மன்பர்தஞ் சிந்தை
வெருளதற மெய்யே பொலிந்திங் - கிருளுமனத்
93. தென்னைப் பொருளாக வென்போ லுடல்சாத்தித்
தன்னைத் தருந்தம்பி ரான்றனடி - சென்னிக்கண்
94. வைத்து மனமகிழ்ந்து வாயார நான்வாழ்த்தும்
பித்ததுவாம் பேரன்பே தந்தருளெ - னத்தா
95. சிவப்பிரகா சாபோற்றி சீமானே போற்றி
யவக்கடலு லாழ்வேனை யாண்ட -தவக்கடலே
96. போற்றி சயசய பல்லாண்டு பல்லாண்டு
போற்றி சயசய போற்றீ
நேரிசை வெண்பா
என்புன் றலைமன்னு மின்பத் திருக்கழலை
யன்பொன்றி யேத்த வனவரத - மின்பஞ்செய்
தாண்டானே தந்தருள் செய்யல்லது வேறொன்றையு
வேண்டா மையுமருள்வாய் மெய்.
// --- முடிவுற்றது --- //