புகழ்ச்சி மாலை - கலிவெண்பா
1. திருநாமம் போற்றுந் திறமறியேற் கிந்த
விருநா னிலத்தி னிடையே - யொருநாம
2. மோருருவ மொன்றுமிலா வுன்மேனி காட்டவருஞ்
சீருடைய செம்பொற் றிருவடியா - யாரமிர்தே
3. தித்திக்குந் தேனே தெளிவிலா நாயேற்கும்
பத்தித் திறமிருக்கும் பண்பளித்தாய் - முத்திக்
4. குடையானே யென்னையாட் கொண்டானே யெண்டிக்
குடையானே யென்னையுடை யானே - கடையானேன்
5. மாளா வகைவந்த வள்ளலே மெய்ப்படவே
யாளா மடியவர்கட் கன்பனே - சூளா
6. மணியே மரகதமே மாற்றிலாச் செம்பொ
னணியே யெனக்கணியை யானாய் - திணியவெறும்
7. பொய்யு மிருளும் பொருந்து மனங்கரையச்
செய்யு மருட்கட் செழுஞ்சுடரே - மெய்யன்பா
8. லாளான நல்ல வடியார் பிழையென்றுங்
கேளானே யென்னுடைய கேளானே - மீளார்க்குத்
9. தோன்றானே தோற்றி யளித்தழிக்குஞ் சோதியுரு
மூன்றானே யோரிடத்து மூன்றானே -வான்றீகான்
10. மண்ணலாய் நீரலாய் மாமலர்த்தாள் சூடாதார்க்
கண்ணலாய் நாயேனுக் கண்ணலாய் - பெண்ணலா
11. யாணலா யன்றி யலியலா யென்றனக்குங்
காணலாய் வந்த கருணையே நாணிலா
12. தென்னையு மாண்டருளு மெந்தையே யென்மனமாங்
கன்னையு மாறு கடைக்கணித்தா - யன்னையிலு
13. நல்லானே வேண்டியவா நான்செய்ய முத்திதர
வல்லானே யென்றனக்கு வாய்த்தானே - சொல்லோடு
14. செய்திமன மொவ்வாத தீமையேன் செய்பணியுங்
கைதவமே யென்றறியக் கல்லானே - மைதீர்ந்த
15. சோதி யுருவே சுரூபானந் தச்சுடரே
யாதி யுடனடுவீ றற்றானே - நீதியா
16. மேலானே கீழா மடியேற்கு வீடளித்த
காலானே நாயேன்றன் கைப்பொருளே - நாலான
17. வேதங்க ளேமுதலா மெய்ந்நூல்க ளாலுன்றன்
பாதங்கள் போற்றறிய பண்புடையாய் - வாதங்கட்
18. கெட்டானே முன்னூல்க ளெண்ணுகின்ற வெட்டுருவத்
தொட்டானே சிட்டருளத்தமிர்தே - கிட்டானே
19. விண்ணோர்க டங்களுக்கு மேதினிமே னீதீயிலேன்
கண்ணார வந்தருளுங் கார்முகிலே - பண்ணார்
20. மொழியார் விழிவலையான் மொத்துண்டு நாயே
னழியாமைக் காத்த வரசே - யொழியாதே
21. யெப்பொருட்கு மெவ்விடத்து மெக்காலத் துங்கலந்த
செப்பொருளே யெப்பொருட்குஞ் சேயானே யப்பொ
22. கப்பொழுது மாராவமிர்தே யடியடைந்தார்க்
கெப்பொழுதுந் தித்திக்கு மின்சுவையே - செப்பரிய
23. பூவோன் முதலாகப் புல்லீறு பல்லுருவாய்
நீவேறு பட்டாய் நிராமயனே - யாவேறு
24. பால்போ லொருதன்மைப் பட்ட பரம்பொருளே
நூல்போ யுணர்வரிய நுண்ணுணர்வே - வேல்போலுங்
25. கண்ணார்தம் பார்வையாற் கட்டுண்டு கள்ளமுறும்
பண்ணார் மொழிகள் பலவுங்கேட் - டண்ணாந்து
26. நிற்கு மதியிலியே னேயமிலா னெஞ்சென்னுங்
கற்கறையச் செய்ததிருக் கண்ணனே - நற்கமலப்
27. பாதந் தொழவறியாப் பாவியேற் குன்னறியும்
போதந் தரவந்த புண்ணியனே - யேதங்
28. கெடுத்தானே கேடிலா நின்பாதங் காட்டி
யெடுத்தானே யென்னாருயிரே - தடுத்தாண்டு
29. கொண்டானே யேதுங் குணமிலே னென்றறிந்துந்
தொண்டாகக் கொண்ட சுடரொளியே - கண்டா னொன்
30. றில்லாத தீங்கரும்பே யாவர்க்குங் கீழேனுக்
கல்லாதா ளுள்ள வறியானே - பல்லுயிரு
31. மீன்றானே யேழையேன் கண்ணொழிய யாவர்க்குந்
தோன்றாது நின்ற சுரூபனே - மூன்றாய
32. காலமே காலங் கடந்திடமே யெப்பொருட்கு
மூலமே யாவு முடிந்திடமே -கோலங்
33. கரியாய் வெளியாய்நீ செய்யாய் கருத
வரியா யெளியா யனந்த - விரிவே
34. யொடுக்கமே பற்பலவா யோதுகின்ற லோகத்
தடுக்கமே யவ்வுலகுக் காணி - யடுத்தவடி
35. வாகும் பளிங்கேபோல் யாதினுக்கு மவ்வவையாய்
நீகுன்றி லாத நிறையொளியே - யோகொன்றி
36. லொட்டானே யொன்றறியா வுன்மத்தன் கையிலகப்
பட்டானே யெட்டாய பல்லுயிரே - யெட்டா
37. வகலமே வண்மையின்யற் றண்மையே யெண்ணுஞ்
சகலமே யொன்றாநீ தானே - பகலிரவொன்
38. றில்லா விரவியே யிவ்வண்ணத் துன்னுருவைச்
சொல்லாதே நான்காணச் சொன்னவனே - யெல்லாமாய்
39. நின்றானே யொன்றுபலா நின்மலனே துன்மனத்தி
லொன்றானே நீமுடிவி லொன்றானே - குன்றா
40. வொளியானே யென்னை யுவந்தாண்டு கொள்ள
வெளியானே சால வெளியாய் - தெளியாதேன்
41. வெற்றவெறும் பொய்யேன் மெய்யடியார் போ லுன்சீர்
கற்றுப் பிதற்றுமது காதலொடுங் - குற்றமெனக்
42. கொள்ளா தெனக்குங் குரைகழறந் தாட்கொண்டு
விள்ளாதென் னுள்ளிருக்கும் வித்தகனே - யெள்ளா
43. வறிவே யறிவடங்கு மாலயமாய் நின்ற
செறிவே யெலாங்கடந்த தேசே - பிறிவதறத்
44. தேசாய மேனி தெளிந்தடைந்தோர் சேர்ந்தமைந்த
வாசாம கோசரமே மற்றெவைக்கு - நீசான்றாய்
45. நின்றா யடியேற்கு நீயளித்த கண்ணதனா
லொன்றாகப் பார்த்தளவி லுன்னையலா - தின்றி
46. யிருந்த தினியடியே னேதாமென் றென்று
திருந்து புகழுன்னைச் செய்வேன் - பொருந்தவுனை
47. யாதி யிமையோர்க ளவ்வுலகின் றிவ்வுலகிற்
போத முனஞ்செய்த புண்ணியத்தா - னாதன்
48.றரணி மிசையதனிற் றாளடைந்தார் சன்ம
மரண மறவருள வந்து - கரணங்கட்
49. கெட்டா வொளியை யிதுவென்று கண்காணு
மட்டாக்கு மென்று வரநினைந்து - கிட்டாராய்
50. நன்மையான் மிக்கவர்க ணின்றுணங்க நாடரிய
தன்மையான் றன்னைத் தரவென்னக் - கெண்மையாற்
51. றன்னா லவத்தை பலவாகத் தான்பாவித்
தென்னா லனைத்து மிலவாக்கித் - தன்னாகத்
52. தன்னாலே யென்னைத் தனதுருவே தானாக்கி
யென்னாலே தற்றுதித்த வென்னானை - முன்னான
53. வென்னரச னென்னப்ப னெம்பெருமா னென்றென்று
நின்னரிய பொன்னடிக்கே நின்றிறைஞ்சி -யுன்னரிய
54. வீசனே யெந்தையே யாவர்க்குங் காண்பரிய
தேசனே யென்றென்று செப்புவார் - நேசமொடுன்
55. பாதம் பணிவார் பரம்பரனே யென்றிசைப்பார்
வாதங்கட் கெட்டாத வாழ்வென்பார் - போதத்தா
56. லாய்தற் கரிய வறிவென்பா ரென்னவலங்
காய்தற்குத் தோன்றுங் கனலென்பார் - மாய்தற்கே
57. வல்லேனை மாளா வகைகாக்க மண்ணில்வரு
நல்லோனே யென்று நலங்கிளப்பார் - பல்லுயிர்க்குங்
58. கோன்றானே யென்பார் குருபரனாய் வீடருளுஞ்
சான்றோனே யென்று சதுரழிவார் - தோன்று பெருஞ்
59. சோதியே யென்பார் சுரூபானந் தாவென்பா
ராதியே யென்பா ரகமகிழ்வார் - நீதியழிந்
60. தார்ப்பா ராற்றுவா ராலிப்பார் கோலத்தைப்
பார்ப்பார் மலர்ப்பாதம் பற்றுவார் - வேர்ப்பார்
61. விழுவார் தொழுதெழுவார் விமமுவார் விம்மி
யழுவா ரதிசயிப்பா ராவார் - வழுவாம
62. லிப்படிநீ யெப்பிறப்பு மாளி லெழில்வீடாஞ்
செப்பதமுந் தீதென்று செப்புவா - ரெப்பொழுதுந்
63. போற்றுவார் நல்ல புகழ்மாலை கொண்டடிமே
லேற்றுவா ரென்செய்வே மென்றுரைப்பா - ராற்றே
64. முடையானே யென்பா ருரைமறப்பார் யார்க்குங்
கிடையானே யென்று கிளப்பார் - கடையேனைத்
65. தொண்டாகக் கொண்டருளுந் தூயோனே நாயடியேன்
கண்டானே யென்று களித்திடுவார் - கொண்டுகொண்
66. டேத்துவார் கும்பிடுவா ரெந்தாய்நின் கோலத்தைப்
பார்த்துவாழ் வார்நின் பழவடியார் - நாத்தழும்பப்
67. போற்று மவருட் புலையேனை யும்வைத்துச்
சீர்த்த திருமேனித் திறங்காட்டிச் - சாற்றுமறை
68. நாடும் பரம்பொருளாய் நான்றெளிந்து பக்தியுடன்
பாடும் பரிசு பணித் தருளித் - தேடுகின்ற
69. விண்ணோர்கள் புண்ணியநீர் மெய்விரும்பா தன்னுடைய
கண்ணீரா மஞ்சனமே காதலித்துப் - பண்ணாரும்
70. வேதமுதல் வெவ்வேறு போற்றிசைத்த மெய்ம்மாலை
பாத மணியாதிப் பாரதனி - லாதமிலி
71. நாயேனை நீயாக்கி நானோதும் பாமாலை
யாயாம லாதரத்தோ டாங்கணிந்து - தேயமெலா
72. மாக்குந் திருப்போ னகமமுது செய்யாதென்
னாக்கு முயிரை யமுதாக்கி - நீக்கின்றி
73. நின்றா யிதுநினையே னெஞ்சுருகே லுள்ளழியே
னுன்றாள் பணியும் வகையுணரே - னொன்றாகப்
74. பாரே னுனையடியேன் பாவியேன் வையமெலா
மாரேனீ யாண்ட வருளுரையே - னூரூர்போய்ச்
75. சாற்றே னகமகிழேன் சம்பிரமத் துன்பாதம்
போற்றேன் புகழ்ந்து புகழ்ந்துரையே - னாற்றேனான்
76. செய்யும் வகையறியேன் றீவினையேன் சேவடி சேர்ந்
துய்யும் வகையருளா யுத்தமனே - பொய்யன்றி
77. மெய்யேநான் செய்கின்ற விண்ணப்பங் கேட்டருளி
யையே யருள வதுவேண்டுந் - துய்யதிருப்
78. பாதந் தொழவென்கை பார்மிசைமேல் வந்தாண்ட
நாதன் றனைத்துதிக்க நாமனமுங் - கேதமறச்
79. சிந்திக்க வின்னருளைச் செய்யதிரு மேனியைக்கண்
பந்திக்க வென்புன் றலைபரனை - வந்திக்க
80. வென்று முரைப்ப ரெழிலடியார் யானதனி
லொன்று முரைக்க வுளத்தெண்ணேன் - பொன்றுங்
81. கடையெலாங் காய்பசியை யஞ்சுதலா னாயேன்
விடயமே மெய்விரும்ப லுற்றேன் - கொடுவினையேன்
82. மாயவிட யத்தே மயங்கா வகையருள
றீய தெனிற்ச்சமிக்கச் செய்தருளல் - காயந்தான்
83. வீய வருளல் விரும்படியார் சிந்தையகத்
தாய பெரும்பத்தி யாங்கருள - னீயருளிச்
84. செய்யா தொழிதியேற் றீவினையேன் போய்நரகுக்
கையா வொருவ னெனவமைவேன் - வையகத்தா
85. ருன்னடியே னேதேனு மானா லுனையிகழ்வா
ரென்னுடைய தீநெஞ்சை யாரரிவார் - பொன்னடிகள்
86. கூடும் பரிசு குறித்தருளி மற்றவைகொண்
டாடும் பரிசெனக்கு மன்பருளிக் - கோடுமனன்
87. போகுந் திறமருளிப் புண்ணியனே நின்னுருவே
யாகுந் திறனே யருள்.
// --- முடிவுற்றது --- //