🙏 போற்றி சங்கீர்த்தனம்

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது


போற்றி சங்கீர்த்தனம் - எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

1. கருவுருவிற் பிறந்தடியேன் கழியா வண்ணங்
கருணைவடி வாய்வந்த கழலே போற்றி 
யுருகுமனத் தடியருட னெனையு மாண்ட 
வுண்மையனே கழல்போற்றி யுடையாய் போற்றி
பொருவதறத் திகழொளியா யுள்ளத் தூறும் 
பொற்புடைய பேரமிர்தே புனிதா போற்றி 
தெரிவருநற் றேவர்கடந் தேவே போற்றி 
சிவப்பிரகா சக்கனியே போற்றி போற்றி.

2. முன்னவனாய் முதனடுவீ றின்றி நின்ற 
முழுமுதலே யடிபோற்றி முனியே போற்றி
யென்னையுமோர் பொருளாக வாண்டு கொண்ட 
வெலையிறிருக் கருணையனே யிறையே போற்றி
பன்னுமறை யீறுகளோர் கோடி யாலும் 
பரிசிதென வரியபரம் பொருளே போற்றி
தென்னவனே சயபோற்றி தேசே போற்றி 
சிவப்பிரகா சக்கனியே போற்றி போற்றி.

3. பிறிவதுவா யுலகதனி லநந்த பேதப் 
பின்னமதாய்ப் பிணக்கிறந்த பெரியோய் போற்றி
குறியதிலா வானந்தக் குன்றே போற்றி 
குரைகடலே யடிபோற்றி குரவா போற்றி
மறுவதிலா மரகதமா மணியே போற்றி 
வள்ளலே வைப்பேயென் வாழ்வே போற்றி
செறிவதுவே சயபோற்றி தேசே போற்றி 
சிவப்பிரகா சக்கனியே போற்றி போற்றி.

4. என்றுமொரு படியாகி நின்றே யிந்த 
வுலகுயிரா கித்தழைத்த வெந்தாய் போற்றி
பொன்றுமுடம் பளவதுவா யுழல்வேன் றன்னைப் 
பூரணமா வேதித்த புனிதா போற்றி
குன்றலிலா மெய்ஞ்ஞானக் கோவே போற்றி 
குரைகடலே யடிபோற்றி குறியே போற்றி
சென்றடையாப் பதமளித்த சிவமே போற்றி 
சிவப்பிரகா சக்கனியே போற்றி போற்றி

5. ஒப்புனக்கு நீயேயா முணர்வே போற்றி 
யோங்கிமையோர்க் கறிவரிய வொளியே போற்றி
யிப்பிறப்பை யறுத்திடுவா னேழை யேற்கே 
யெளிவந்த பெருமையனே யீசா போற்றி
யப்புறத்துக் கப்புறமா யணுக வொண்ணா
வதிதூர மேபோற்றி யணியாய் போற்றி
செப்புதற்கு நானொன்று மறியேன் போற்றி 
சிவப்பிரகா சக்கனியே போற்றி போற்றி

6. மாறாத பத்தியிலுக் கெளியாய் போற்றி
மதியிலேன் றனையாண்ட மைந்தா போற்றி 
வேறேது மில்லாத விளைவே போற்றி
வித்தகனே யடிபோற்றி விமலா போற்றி
வாறாத பேருவகைக் கண்ணீ ரன்ப 
ரகம்விட்டோ ரடிநீங்க வறியாய் போற்றி 
தேறாதா ருண்ணின்றுந் தெளியாய் போற்றி 
சிவப்பிரகா சக்கனியே போற்றி போற்றி

7. அறிவேது மில்லாக கடையே னாத
லறிந்தருளி வைத்துமெனை யாண்டாய் போற்றி 
குறியேது மில்லாநல் லடியார் செல்வக் 
கோதில்குலத் தெனைச்சேர்த்த குரவா போற்றி
முறியாத வானந்த மூறு வெள்ள 
மூலமே போற்றியருண் முகிலே போற்றி 
செறியாத செறிவேயென் றெளிவே போற்றி 
சிவப்பிரகா சக்கனியே போற்றி போற்றி

8. எல்லாமா யீறின்றி நின்றாய் போற்றி
யேதுமிலா வென்னையுமாட் கொண்டாய் போற்றி
கல்லாமை யடியேற்குக் கல்வி யெல்லாங் 
கடந்தபெரும் பதமளித்த கண்ணே போற்றி
யல்லாதொன் றில்லாத வறிவே போற்றி 
யத்தனே போற்றியரி யானே போற்றி
சொல்லாலீ தெனவரிய சுகமே போற்றி 
சுரூபானந் தக்கனியே போற்றி போற்றி

9. இன்னிசையா யியலாகிப் பயனாய் நின்ற 
வின்னமிழ்தே போற்றியிணை யிலியே போற்றி
மன்னியமா னுடனாகி யன்பர்க் கெல்லாம்
வாழ்வறவாழ் வளித்தாண்ட மணியே போற்றி
யன்னையிலு நல்லன்பா யருளானாயே 
னாழாமைக் காத்தெடுத்தாட் கொண்டாய் போற்றி
துன்னியநற் பேரின்பச் சுகமே போற்றி 
சுரூபானந் தக்கனியே போற்றி போற்றி

10.போற்றுமவ ருளத்தமிழ்தாம் பொன்னே போற்றி 
பூரணனே போற்றிபுரா தனனே போற்றி
வேற்றுவிகா ரங்களெலாந் தீர்த்தாட் கொண்ட 
வேதியனே விண்ணவனே விமலா போற்றி
சாற்றியமா மறையோடு மூவர் காணாத் 
தத்துவனே சயபோற்றி தலைவா போற்றி
தோற்றமெலா மாய்நிகழுந் சுடரே போற்றி 
சுரூபானந் தக்கனியே போற்றி போற்றி

// --- முடிவுற்றது --- //