🙏 போற்றி மாலை

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது


போற்றி மாலை - கலிவெண்பா

1. வானாடர் கோனு மலரோனு மாலோனுங்
கானாடு கின்றநுதற் கண்ணோனுந் - தாநாட

2. மாட்டார் மதிமயங்கி மாமறையி னீறுகளுந்
தாட்டா மரைதேடித் தானரற்றச் - சேட்டார்

3. முனிவரெலாங் காணார்போய் முந்நீரி னுள்ளே
பனிவருங்கா லத்துப் படிந்துந் - துனிபெருகுங்

4. கோடையினில் வெய்ய கதிருங் கொடுந்தீயும்
பாடு மெரியப் பதைபதைத்தும் - வாடித்

5. தலைகீழாய் நின்று தபித்துச் சலமோ
டிலைகாய் கிழங்குகாற் றெய்திற் - றலமாகக்

6. கொண்டயின்றுங் காடுங்  குமிடு மிடமாகக்
கண்டுயின்று மிங்ஙனே காயத்தைக் கொண்டு

7. படக்கடவ வெத்தனையும் பட்டாலும் பட்டு
விடக்கடவ ராக விதித்திங் - கடற்புலன்க

8. ணீத்தார்க டங்க ணினைவுங் கடந்தகமே
பார்த்தார்க் கதிதூரப் பட்டிருண் - டேத்துவார்க்

9. கின்ன தெனவறிய வில்லா வியல்பதனா
லன்ன வரையு மயர்ப்பித்துத் - தன்னுருவ

10. மாணென்ன வன்றி வலியென்னப் பெண்ணென்னப்
பேணும் வகையின்றிப் பேசுங்காற் - காண

11. வொருவழியு மின்றி யுரையுணர்வுக் கெட்டாத்
திருவடிவை யுள்ளங்கைச் சேர்ந்த - தொருகனிபோற்

12. கண்டோமென் பார்காட்சி யாவையுங் கைகடந்
துண்டோ விலதோவென் றோர்வுமத் - திண்டாடப்

13. பண்ணிப் பரம கருணையினா லோருருவாய்
நண்ணித் திருஞான நாட்டத்தைத் - திண்ண

14. மளித்திடினு மன்பர்க் ககமதிப்பின் முன்வந் 
தொளிப்படுமா போலே யொளித்தும் - வெளிப்படா

15. யெம்பிரா னென்றிரந்தும் யாவர்க்கு மெய்தரிய
தம்பிரா னாயேற்கித் தாரணிக்கே - செம்பொற்

16. கழல்காட்ட வாகமெலாங் கண்ணாகக் காணே 
னழல்காட் டியமெழுகே யாகே - னெழில்போற்ற

17. வாயா யிரங்காணேன் மாறாப் பெருங்களிவந் 
தோயா துருகு முளங்காணேன்- காயம்

18. புரையுள்ள வெல்லையும்போய்ப் பூரிக்கக் காணேன் 
கரையுந் திறந்தானுங் காணேன் - றிரைகொண்ட

19. வாழிபோ லார்த்தோங்கி யாகாயத் தோடுநில 
னேழையே னாலித் தெழுந்துவிழேன் - வாழே

20. லுருகேன் பெருகே னுடையானே யுன்னிப்
பருகேன் பரவேன் பதையே-னொருகால்

21. விழிபனியேன் வெய்துயிரேன் மெய்சோரேன் விம்மே 
னெழிவறவே நின்றுருக்கி யூனைக் - கழிவுறவே

22. பாரேன் பயந்துள்ளம் பாதாதி கேசமுற 
வேரேன் வியவேன் விதிர்விதிரே - னீராய்க்

23. கரையே னெனதுடலங் கம்பிக்கக் காணேன்
விரையேன் மலர்ப்பதத்தே வீழே -னுரையுங்

24. குழறேன் றழுதழுத்துக் கூத்தாடே னெஞ்சைக்
கழறேன்கண் ணீர்சொரியக் காணே - னுழரே

25. னொளியே யடியே னொருவியப்புங் காணேன்
களியேனான் செய்யும்வகை காணேன் - றெளிவிலே

26. னாற்ற வறிகிலே னத்தா கழல்போற்றி
தோற்று சுரூபச் சுடர்போற்றி - நாற்றிசையுங்

27. கீழ்மேலு மெங்குங் கிளரொளியா யப்புறம்போய்ச் 
சூழ்மேவி நின்ற சுடர்போற்றி - யூழ்மேவு

28. காயங் கரைவித்த கண்போற்றி காற்  றியமான் 
றோயந் தரைவிண் சுடர்மூன்று - மேய

29. வருவித்த வல்லபம் போற்றி யவைமாற் 
றொருவித் தகம்போற்றி யுன்னைத் - தெரிவித்த

30. வாபோற்றி நின்னை வளைவோ ருளம் விட்டு 
நீபோக் கிலாத நிலைபோற்றி - தீபத்

31. தொளியின் றெளிவாய வோருருவம் போற்றி 
களியொன் றியகழல்கள் போற்றி - யெளிவந்து

32. பேயேனை யாண்டு பிழைபொறுத்தென் பேதைமையை
நீயே தவிர்க்கு நெறிபோற்றி - தாயேயென்
 
33. றந்தையே போற்றி தமியேனை யாட்கொண்ட
வெந்தையே யீசா விறைபோற்றி பந்த

34. மறுத்தானே போற்றி யடியேன் பிறப்பை
வெறுத்தானே போற்றி வினையான் - மறுத்துன்

35. றிருவருணோக் காலெனது சித்தந் திரித்த 
வொருவிரகே யுத்தமனே போற்றி - பருகமிர்த

36. மானானே போற்றி யடிநாயே னெஞ்சிடையே 
தேனாகித் தித்திக்குஞ் சீர்போற்றி - யானா

37. ரவனியின் வந்தாள வாற்றுகிலேன் போற்றி 
சிவனயன்மா லாந்தேவே போற்றி - தவமிலியே

38. னென்செய்தேன் போற்றி யிறைபோற்றி யெப்பொரு
முன்செய்தா னேமுழுது நீபோற்றி - நின்செயலிங்

39. காரறிவார் போற்றி யனைத்துமா யல்லாத 
பேரறிவே போற்றிவெறும் பேயேற்குப் - பாரறியத்

40. தந்தாய் மலர்ப்பாதந் தம்பிரா னேபோற்றி
சிந்தா குலந்தவிர்த்த சீர்போற்றி - கொந்தாருந்

41. தாளிணைகள் போற்றி தரிக்கிலேன் காண்போற்றி 
யாளெனையுங் கொள்வதழ கோபோற்றி - மாளாமே

42. காத்த கழல்போற்றி நாயேன் கவலையெலாந் 
தீர்த்த விழியின் றிறம்போற்றி - வார்த்தை வெறு

43. மொன்றாலே யெண்ணிறந்த வூழிவரு மென்பவத்தைக்
கொன்றானே போற்றி குறிபோற்றி - பொன்று

44. மிதமோ டகமேவு மென்மயலை மாய்த்த
மதஞான வாரணமே போற்றி பதகக்

45. கலையோ தலைவலைகள் காண்டற் கரிய 
நிலையேயென் னின்மலனே போற்றி - சிலைபோலு

46. மென்னெஞ் சினைநெகிழ்த்த தென்செய்த வாபோற்றி 
முன்னஞ்செய் தாய்மூர்த்தி யேபோற்றி - யின்னந்

47. தெளிகிலேன் போற்றி தெளியாத வென்னை 
விளிகிலேன் வித்தகனே போற்றி - யளிபவர்த

48. முள்ளத் தமிர்தே யுடையானே யோபோற்றி
தெள்ளத் தெளிவே செயபோற்றி - கொள்ளக்

49. குறைவிலா வின்பக் குணக்கடலே போற்றி 
யிறைவனே யென்னுரைக்கேன் போற்றி - முறையோ

50. கைம்மாறு காணேன் கருணைப் பெருங்கடலே 
யம்மானே போற்றி யடிபோற்றி - பொய்ம்மாயந்

51. தீர்த்தாய் பிரானே பிரானே செயபோற்றி
காத்தாய் கருணா கரபோற்றி - மூர்த்தியே

52. மூலமே போற்றி முழுதழிய வுள்புகுந்த
கோலமே போற்றியெனைக் கோப்பழித்த - சீலத்தின் 

53. வித்தகமே போற்றி வினையேனை நின்றுருக்கு 
முத்தமனே போற்றியுடை யாய்போற்றி - பத்திக்

54. கடலா மடியவர்முன் காசினிமேன் மாய 
வுடலா னதைதானென் றுன்னி - யடலார்

55. புலனெறியே போவேனைப் புண்ணியநீ யாள்கை
நலனதுவே நாயகனே போற்றி - சலமதிபோ

56. னின்று குலைகுலையு நெஞ்சந் திரித்தவிர
கொன்று மறியே னுரையிறந்த - குன்றமே

57. போற்றி புனிதாநின் பொற்கழலே யெப்பொழுதுஞ்
சாற்ற வளித்த சதுர்போற்றி - தோற்றமெலா

58. நீயேகாண் போற்றி நினைவணங்கா தாரெல்லாம்
பேயேகாண் போற்றிவெரும் பித்தனே - னாயேனான்

59. சொல்லும் வகையறியேன் சோத்தெம் பிரான்போற்றி
கல்லு மனங்கரைத்த கண்போற்றி - யல்லும்

60. பகலு மடியேனை யாண்டவா பார்மேற்
புகலும் வகையருளாய் போற்றி - சகலமு

61. முன்னிற் பிறந்திறக்க வொன்றிற் பிறந்திறவாத்
தன்னந் தனியேநின் றாள்போற்றி யென்னொப்பி

62. லென்னையாட் கொண்ட விறையே முறைபோற்றி
முன்னையாய்ப் பின்னாய் முழுதுமாய் - மன்னும்

63. பொருளாய பூரணனே போற்றிதாள் போற்றார்க்
கிருளா யிருப்பவனே போற்றி - யருளேது

64. மற்றேன்காண் போற்றி யடியே னடையவுனைப்
பெற்றேன் பிழைத்தேன் பெருமானே - சிற்றின்பம்

65. வேண்டாவேண் டாபோற்றி வெவ்கினையே னுள்ளுருக்கி
யாண்டானே போற்றி யடிபோற்றி - தூண்டுசுடர்ச்

66. சோதி துறந்தோர் துணையே கழல்போற்றி
யாதி யறிவே யருள்போற்றி - பேதையேன்

67. றோழாநின் செம்பொற் றுணைமலர்த்தாள் காணாநான்
வாழேன்காண் போற்றி மதிபோற்றி -யேழையே

68. னாற்றுகிலேன் போற்றி யருளாய் கழல்போற்றி
தேற்றமெனக் குன்சே வடிபோற்றி - போற்றி

69. சுரூபானந் தச்சுடரே யென்றுணையே போற்றி
திருவேயென் செய்தவமே போற்றி - கருவாய

70. மூலமே போற்றி முடிவே யடிபோற்றி 
ஞாலமே விண்ணே நலம்போற்றி - தூலமே

71. நுண்மையே போற்றிமிகு நுண்ணுணர்வோர் தங்கருத்தி
னுண்மையே போற்றி யொளிபோற்றி - கண்மேவிக்

72. காண்பதெலா நீயொழியக் காணேன் கழல்போற்றி 
பூண்பதினி யுன்பொற் கழல்போற்றி - யாண்பெணலி

73. யல்லானே போற்றி யடியேன் பிழை பொறுக்க 
வல்லானே போற்றி மதியிலேன் - பொல்லாதே

74. னென்றறிந்து மாட்கொண்டாய் போற்றிநீ யெவ்விடத்து
நின்றறிந்த நின்மலபோ தம்போற்றி - யொன்று

75. மறியே னுடையா யடைக்கலநான் போற்றி
சிறியே னிடர்சிதையாய் போற்றி - குறியேது

76. மில்லாத வின்பப் பெருங்கடலே யேத்தினர்க்கு
நல்லா யெனையா ணயம் போற்றி - பல்லாண்டு

77. போற்றி சயசய பல்லாண்டு பல்லாண்டு 
சீர்த்திற மேதுந் தெரியாதேன் - றோற்றியவா

78. விண்ணப்பஞ் செய்தலிது வேதங்கள் கண்டுதுதி
பண்ணப் பெறாதமலர்ப் பாதத்தே - நண்ணுமே

79. யென்போல வெல்லாப் படியாலுங் கீழெனக்கு
முன்போ ருயிரில்லை முற்றுணரிற் - பின்பு

80. முளதாகா திப்பரிசே யுள்ளேனை யாண்ட 
பளகாவென் பாக்கியமே போற்றி - யுளகாலங்

81. கொண்டாடி நாவுன் குணம்பரவ நின்கோலங் 
கண்டார நாயேன்றன் கண்ணிரண்டு - மண்டாநின்

82. கீர்த்தியினை யெப்பொழுதுங் கேட்டென் செவியுவப்ப 
மூர்த்தி கழலே முடிசூட - வேத்துதற்கு

83. வானவருங் காணாத மாணிக்கப் பாதமலர்
ஞான மணம்பருக நாசியென - தூனடைய

84. வுள்ளமாய் நின்றுருக வோருடம்புங் கண்ணாகி 
வெள்ளமாய் நீர்சொரிய நான்வியப்ப - வள்ளலே

85. யுன்னடியா ரேவற் றொழிலுவந்து நான்செய்யப் 
பொன்னடிதா போற்றி புகழ்போற்றி -யின்ன

86. மதுவே யிரக்கின்றே னாயிரங்கால் போற்றி 
யிதவே பெறிலடியே னென்றுங் - கதியேது

87. மில்லாப் பிறவியிலே யென்றும் பிறந்தாலும் 
பொல்லாதென் றீதே புரிபோற்றி - கல்லாக்

88. கயவேனை யாண்ட கருணைக் கடலே
செயபோற்றி செம்பொற் கழல்

// --- முடிவுற்றது --- //