மஹாதேவம் - கலிவிருத்தம்
1. தேறாமைய துற்றேதினி கற்போலவன் னெஞ்சுற்,
றாறாவெனை யாராவமிழ் தந்தோசெய்த தென்றா,
னீறாயெழ வன்பாசமே நெஞ்சார நிறைந்தே,
மாறாத மஹானந்த மஹாதேவ மஹாதேவ.
2. பற்றேதையு மற்றாரவர் நிற்கப்பழு துற்றே,
யற்றே னென வாராவமிழ் தந்தோசெய்த தென்றான்,
றுற்றார நிறைந்தேசுக சிற்சாகர மாயே,
வற்றாத மஹானந்த மஹா தேவ மஹாதேவ.
3. ஆசைக்கட லுற்றேயழி வேனைப்பொருளாவந்,
தாச ற்றநல் லாராவமிழ் தந்தோசெய்த தென்றான்,
றேசுற்றென துள்ளேசுக சிற்சத்தது வாயே,
மாசற்ற மஹானந்த மஹா தேவ மஹாதேவ.
4. குடியாவடி யோ மாமெனை யாட்கொண்ட தனக்கே,
நெடிதாகிய வன்பாயிட நித்தன்செய்த தென்றான்,
படி யேது மிறந்தேபரு காநல்லமிழ் தாயே,
வடிவாய மஹா னந்த மஹாதேவ மஹாதேவ.
5. முட்டாநிய மத்தேனலன் முத்திக்குற முற்றும்,
விட் டேனல னற்றேனலன் வீரன்செய்த தென்றான்,
கட்டா மிரு பாதிக்கறை யற்றார்கரி மேலா,
மட்டாய மஹானந்த மஹாதேவ மஹாதேவ.
6. விதியார்கலை மேவும்மெலை யின்றாயொழி வின்றா,
யித மோடக மல்லானெனை யந்தோசெய்த தென்றான்,
கதியா யொளிர் கண்ணாயென தெண்ணேது மிறந்தே,
மதியாய மஹானந்த மஹாதேவ மஹாதேவ.
7. எழிலுற்றெலை யின்றாயவி யோனிக்கதி தோறு,
மழலுற்றழி வேனைப்பர னந்தோசெய்த தென்றான்,
பொழி வுற்றுல கெங்கும்புர ணப்பூரண மாயே,
வழுவற்ற மஹா னந்த மஹாதேவ மஹாதேவ.
8. அற்றார்த மகத்தேயமிழ் தச்சாகர மாயே,
வற்றாதவ ளத்தானெனை யந்தோசெய்த தென்றா,
னற்றாயினு மிக்கார நலத்தானுவ மத்தான்,
மற்றேது மஹானந்த மஹாதேவ மஹாதேவ.
9. கருவுற்ற பவச்சாகர முற்றேகழி வுற்றே,
வெருவுற் றழி வேனைப்பர னந்தோசெய்த தென்றா,
னுருவற்றரு வற்றேயெ னுளத்தேயமிழ் தானான்,
மருவற்ற மஹானந்த மஹாதேவ மஹாதேவ.
10. முந்தாவம ரர்க்கும்மறி வொண்ணானடி யார்பா,
னந்தாத நலத்தானெனை யந்தோசெய்த தென்றான்,
றந்தா ளிணை தந்தானுயிர் கொண்டானொரு தானாய்,
வந்தாரு மஹானந்த மஹாதேவ மஹாதேவ.
// --- முடிவுற்றது --- //